சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்னை துறைமுகம் தொகுதியில் நேற்று திறந்த வாகனத்தில் வீதி வீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பிரச்சாரத்தை பிரதான கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. அதற்கு ஏற்ப பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவின் தேசியத் தலைவர்கள் அனைவரும் தமிழகத்தில் தொடர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக தமிழகம் வந்துள்ளார். அதன்படி, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தை ஆதரித்து திறந்த வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டார்.
பிராட்வே பேருந்து நிலையம் அருகே உள்ள பூக்கடை காவல் நிலையத்தில் இருந்து 7.15 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர், என்எஸ்சி போஸ் சாலை வழியாக பயணத்தை மேற்கொண்டார். தொடர்ந்து, மிண்ட் சாலை, குமரகுரு சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று தங்க சாலை மணிக்கூண்டில் பிரச்சாரத்தை முடித்தார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் இந்த திறந்த வாகன பிரச்சாரம் பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. வழி நெடுக மலர் தூவி பாஜக தொண்டர்கள் ஜே.பி. நட்டாவுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். இந்த பிரச்சார பயணத்தின்போது ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரான தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் பாலகங்கா, தமிழக பாஜக ஓபிசி பிரிவுத் தலைவர் லோகநாதன், துறைமுகம் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஜே.பி. நட்டாவுடன் வாகனத்தில் நின்றபடி பயணித்தனர்.
துறைமுகம் தொகுதியை பொறுத்தவரை வட மாநிலத்தவர்கள் அதிகமாக வாக்காளர்களாக உள்ளனர். இதனால், பிரச்சாரத்தின்போது தேர்தல் வாக்குறுதிகள் இந்தியில் தெரிவிக்கப்பட்டது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு தாமரை சின்னம் வரையப்பட்ட குடைகள் வழங்கப்பட்டிருந்தன. அதனை பார்த்த ஜே.பி. நட்டா, குடைகள் மிக அழகாக இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக, அதிமுக சார்பில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின்போது மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வேடம் அணிந்த கலைஞர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.
இதற்கிடையே, பிரச்சார ஊர்வலத்தில் பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் தொண்டர்கள், பெண்கள் இளைஞர்கள் உட்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதால் பூக்கடை, பிராட்வே பஸ் நிலையம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.