தமிழகம்

மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் திருத்தணி முருகன் கோயில் குடமுழுக்கு நடத்தப்படும்: திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி தகவல்

செய்திப்பிரிவு

திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணி திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதால், அப்பணி முடிந்தும் குடமுழுக்கு நடத்தப்படாமல் உள்ளது. ஆகவே, திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் குடமுழுக்கு நடத்தப்படும் என திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று திருத்தணி, திருவள்ளூர் தொகுதிகளின் திமுக வேட்பாளர்களான எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து, திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி, கே.ஜி.கண்டிகை, புஜ்ஜிரெட்டிபள்ளி மற்றும் திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட திருப்பாச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, மேல் திருத்தணியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட லியோனி வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:

திமுக ஆட்சி காலத்தில்தான் தமிழகத்தில் இந்து கோயில்களுக்கு அதிக அளவில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. இந்து கோயில்களை புனரமைக்க ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணி திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதால், அப்பணி முடிந்தும் அதிமுக அரசு குடமுழுக்கு நடத்தாமல் உள்ளது.

ஆகவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் திருத்தணி முருகன் கோயில் குடமுழுக்கு நடத்தப்படும். அதற்கு உதயசூரியனுக்கு வாக்களித்து சந்திரனை சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT