மாநில உரிமையை டெல்லியில் அடகு வைத்தவர் பழனிசாமி என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா குற்றஞ்சாட்டினார்.
அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பாவை ஆதரித்து கீழப் பழுவூரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியது:
மிசா சட்டத்தை எதிர்த்து தனது 23 வயதில் சிறை சென்றவர் ஸ்டாலின். தலைவர் பதவிக்கு படிப்படியாக வந்தவர் ஸ்டாலின். ஆனால், எந்த தகுதியும் இல்லாமல் முதல்வராக இருப்பவர் பழனிசாமி.
கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பல கல்லூரிகளையும், வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்தார். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை, நீட், ஜிஎஸ்டியை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா ஆட்சியை தருவதாக கூறும் பழனிசாமி, தமிழகத்தில் நீட், ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்தையும் அனுமதித்து விட்டார். மாநில உரிமையை டெல்லியில் அடகு வைத்தவர் பழனிசாமி. பாஜகவிடம் நாங்கள் கூட்டணி வைத்தபோது, மதவாதம் உள்ளே வரவில்லை. ஆனால், தற்போது மதவாதம் தமிழகத் தின் உள்ளே வந்துவிட்டது.
நாங்கள் சிறப்பான ஆட்சியை தர தயாராக உள்ளோம். எனவே, அனைவரும் திமுக கூட்டணிக்கு வாக்க ளியுங்கள் என்றார்.
குன்னம் தொகுதியில் பிரச்சாரம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா நேற்று பிரச்சாரம் செய்தார்.