தமிழகம்

போக்குவரத்து நெரிசலால் தினமும் ஸ்தம்பிக்கும் மதுரை; இதுவரை தீர்வு காணாத கட்சிகள்: தேர்தல் பிரச்சாரத்திலும் மறந்துபோன வேட்பாளர்கள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை நகரப் போக்குவரத்து நெரிசல் பற்றி எந்தக் கட்சி வேட்பாளர்களும் வாய் திறக்காதது மாநகர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மதுரைக்கு வராத திட்டங்களை சொல்லியும், வந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்காத திட்டங்களைக் கூறியும் பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகள், இதுவரை தீர்வு காணப்படாத மதுரை போக்குவரத்து நெரிசலைப் பற்றி மறந்தும் வாய் திறக்காமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னைக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரான மதுரை, மீனாட்சியம்மன் கோயிலை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட பாரம்பரிய நகரம்.

இந்த நகரின் சாலைகள் அனைத்தும் பழைய மதுரையின் மக்கள் தொகை, அந்தக் காலத்தின் கட்டமைப்புக்கு தகுந்தார்போல் அகலமில்லாமல் மிகக் குறுகலாகவும், ஒழுங்கற்றும், பார்க்கிங் வசதி இல்லாமலும் உள்ளன.

இந்தச் சாலைகளில் வணிக நிறுவனங்கள் அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் மிக நெருக்கமாக உள்ளன. மக்களும், நகர்ப்புற பகுதிகளில் மிக நெருக்கமாக வசிக்கின்றனர். நகர்ப்புற சாலைகளில் உள்ள பெரும்பாலான வியாபார நிறுவனங்களுக்கு ‘பார்க்கிங்’ வசதியில்லாததால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையையே பார்க்கிங்காக பயன்படுத்துகின்றனர்.

முக்கியச் சாலைகளில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், பார்க்கிங் வசதியே இல்லாத சாலைகளில் மாநகராட்சி வாகன ஓட்டிகளிடம் ‘பார்க்கிங்’ கட்டணம் வசூல் செய்யும் அவலம் நடக்கிறது.

மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகள், மாட்டுத்தாவணி முதல் கோரிப்பாளையம், சிம்மக்கல் வழியாக பெரியார் பஸ்நிலையம் வரை பாலங்கள் எதுவும் கட்டப்படாததால் வானகங்கள் ‘பீக் அவர்’ மட்டுமில்லாது நாள் முழுவதுமே சாலைகளை கடந்து செல்ல சிரமப்படுகின்றன. சில நேரங்களில் மணிக்கணக்கில் நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்து வாகன ஓட்டிகளும், அதில் பயணிகளும் தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் கணக்கில்லாமல் ஆட்டோக்கள் அதிகரித்துவிட்டன. அவற்றைக் கட்டுப்படுத்தவும், வரைமுறைப்படுத்தவும் மாநகர காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

ஒரு புறம் மக்கள் தொகை, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்நிலையில் அதற்கான சாலை கட்டமைப்பும், பார்க்கிங் வசதியும் மதுரையில் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

அதனால், தற்போதும் கூட மதுரையின் வைகை வடகரை மக்கள் மட்டுமில்லாது, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கூட நகர்ப்பகுதிகளுக்கு வந்தே திண்டுக்கல், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய உள்ளது.

இந்த வாகனங்கள் நேரடியாக செல்வதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்த சிட்டம்பட்டி-வாடிப்பட்டி வெளிவட்ட சாலை தற்போது வரை தொடங்கப்படவில்லை.

அதனால், நகர்ப் பகுதிகளில் நெரிசல் அதிகரித்து சாலைகளில் வாகனங்கள் தடையின்றி செல்ல முடியாமல் ஊர்ந்து செல்வதால் தினமும் நகரின் போக்குரவத்து ஸ்தம்பிக்கிறது. இந்த வெளிவட்ட சாலை மட்டும் முடிந்தால் நகரின் போக்குவரத்து நெரிசல் 40 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.

இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கு ஆளும்கட்சி, எதிர்கட்சி மக்கள் பிரதிநிதிகள் முன் வரவில்லை. ஆனால், மதுரையில் தேவையில்லாத இடங்களில் கொண்டு போய் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை விரயமாக்கியுள்ளனர்.

மதுரைக்குப் பிறகு வளர்ச்சியடைந்த நகரங்களில் கூட பறக்கும்பாலம், மேம்பாலங்கள் அதிகளவு கட்டி, போக்குவரத்து நெரிசலுக்கு அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் தீர்வு கண்டுள்ளனர்.

ஆனால், மதுரையில் அறிவித்த ‘மெட்ரோ ரயில் திட்டம்’ தற்போது வரை வரவில்லை. ஆனால், மதுரையுடன் அறிவித்த கோவைக்கு நிதி ஒதுக்கீடு விரைவில் பணிகள் தொடங்கப்படுகிறது.

அதுபோல், மதுரையுடன் மற்ற இடங்களுக்கு அறிவித்த விமானநிலையத்திற்கு இணையான வசதி கொண்ட ‘பஸ்போர்ட்’ திட்டம் திட்டத்திற்கு இடம்பார்த்து பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடக்கிறது. ஆனால், மதுரையில் இன்னும் இந்த ‘பஸ்போர்ட்’ திட்டத்திற்கான இடம் கூட தேர்வு செய்யப்படவில்லை.

அதனால், இந்தத் திட்டமே பக்கத்து மாவட்டங்களுக்கு கைவிட்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோரிப்பாளையம் உயர்மட்ட மேம்பாலம், அங்கிருந்து சிமக்கல் வழியாக பெரியார் பஸ்நிலையம் வரையிலான பறக்கும் பாலம் போன்றவை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அறிவித்தார்.

இந்தத் திட்டங்களில் நில ஆர்ஜிதம் செய்வதில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து மேம்பாலம் கட்டுவதற்கு உள்ளூர் அமைச்சர்கள் முயற்சி எடுக்கவில்லை. அதனால், மாட்டுத்தாவணியில் இருந்து காளவாசல் செல்ல தற்போது ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. பாலம் கட்டினால் இந்தப் பயணம் நேரம் குறைவதோடு வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் சிரமமில்லாமல் விரைவாக சென்று வரலாம்.

ஆனால், இதுபோன்ற நீண்ட கால போக்குவரத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பதற்கான வாக்குறுதிகளை தற்போது மாநகரப்பகுதிகளில் போட்டியிடும் அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்களே மறந்துவிட்டனர்.

வாக்குறுதிகளைக் கூட சொல்வதற்கு மறந்த வேட்பாளர்கள், எப்படி வெற்றி பெற்று இந்தத் திட்டங்களை தூசி தட்டி நிறைவேற்றுவார்கள் என்று? மதுரை மக்கள் கவலையடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT