ஸ்டாலின் உண்மை பேசினால் எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர முடியும், இல்லாவிட்டால் அதுவும் கிடைக்காமல் போய்விடும் என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
''முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்துவிட்டனர் என்று ஸ்டாலின் பேசி வருகிறார். மக்களை நீதிபதியாக வைத்து அவர்கள் முன்னிலையிலேயே நாம் நேருக்கு நேர் விவாதிக்கலாமென்று நானும் பலமுறை கேட்டும், பல காரணங்கள் சொல்லி தப்பி விடுகிறார்.
எங்களுக்கு மடியிலே கனமில்லை, வழியிலே பயமில்லை. திமுக ஆட்சியில் 13 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் போட்டு நீதிமன்றத்தில் 5 வருடமாக வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் மறைப்பதற்காகச் செல்லும் இடங்களிலெல்லாம் எங்கள் மீது புழுதி வாரி தூற்றிக் கொண்டிருக்கிறார். உண்மை என்ன என்பது மக்களுக்குத் தெரியும்.
நீங்கள் உண்மையைப் பேசினால் எதிர்க்கட்சியினர் வரிசையிலாவது வர முடியும் ஸ்டாலின் அவர்களே. இந்த ஆட்சியையும் கட்சியையும் முடக்க முயற்சி செய்து தோல்வியடைந்த ஸ்டாலின், தற்போது, எப்படியாவது பொய் பேசி ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறார். திமுக கார்ப்பரேட் கம்பெனியில் இந்த மாவட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆரும் செந்தில்பாலாஜி, எ.வ.வேலு அனைவரும் பங்குதாரர்கள்.
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட செல்லாத நோட்டுகளெல்லாம் திமுகவில் சேர்ந்துவிட்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புலவர் இந்திரகுமாரி மற்றும் செல்வகணபதி மீது திமுகவினர் வழக்குத் தொடுத்தனர். இதில் செல்வகணபதிக்கு இரண்டாண்டுகள் தண்டனை கிடைத்தது. இவர்கள் திமுகவில் சேர்ந்தவுடன் உத்தமர்கள் ஆகிவிட்டதுபோல திமுகவில் செல்வகணபதிக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்துள்ளனர்.
அப்படிப்பட்ட கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஊழல் பற்றிப் பேசுகிறார். அதேபோல, தேனியில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்துள்ளனர். திமுக கம்பெனிக்கு யார் அதிகமாகக் கொடுக்கின்றனரோ அதற்கேற்ப பதவி கிடைக்கும்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.