மதுரையில் ஏப். 2-ல் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் ஏ.கே.சிங் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, மார்ச் 30-ல் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்கிறார். ஏப். 2-ல் மதுரை, நாகர்கோவிலில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்.
மதுரையில் ஏப். 2-ல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசுகிறார்.
மதுரை சுற்றுச்சாலையில் உள்ள அம்மா திடலில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இங்கு பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசுகின்றனர்.
பிரதமர் மோடி பேசவுள்ள மதுரை அம்மா திடல் மைதானத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செலம் இன்று ஆய்வு நடத்தினார்.
அப்போது, மத்திய அமைச்சர் வி.கே.சிங், தமிழக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அதிமுக வேட்பாளர்கள் ராஜன் செல்லப்பா, கோபாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.சரவணன், கே.மாணிக்கம், பாஜக வேட்பாளர் டாக்டர் பா.சரவணன், பசும்பொன் தேசிய கழக வேட்பாளர் ஜோதிமுத்துராமலிங்கம், பாஜக பொதுச் செயலர் ராம.ஸ்ரீனிவாசன், பாஜக மாவட்ட தலைவர்கள் கே.கே.சீனிவாசன், மகா சுசீந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவர் சசிராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், பொதுக்கூட்ட மேடை அமைப்பு, பிரதமர் வரும் ஹெலிகாப்டர் இறங்கும் இடங்களை துணை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரை பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு நாகர்கோவில் செல்லும் பிரதமர், அங்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார்.