புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றாக விராலிமலை அமைந்துள்ளது. அதிமுக சார்பில் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும், திமுக சார்பில் எம்.பழனியப்பனும் போட்டியிடுகின்றனர். பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
தேர்தலுக்கு முன்னதாகவே தொகுதி மக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரணப் பொருட்கள், வேட்டி, சேலை, பித்தளைப் பானையுடன் பொங்கல் பரிசுப் பொருட்கள் என ஏராளமான பொருட்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்க உள்ளதாகவும், அளவுக்கு அதிகமாக செலவு செய்து வருவதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, விராலிமலை வடக்கு ஆசாரி தெருவில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளரான வீரபாண்டியனின் அடுக்குமாடி வீட்டில் இன்று (மார்ச் 26) வருமான வரித்துறை துணை ஆணையர் அனுராதா தலைமையில் 4 கார்களில் வந்த அதிகாரிகள் 7 பேர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீரபாண்டியனுக்குச் சொந்தமான 6 வீடுகளைக் கொண்ட குடியிருப்பிலும், அண்டை வீடுகளிலும் புகுந்து அதிரடி சோதனை செய்து வருகின்றனர். சோதனையின்போது வீரபாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தனர்.
இவர், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமாருக்குத் தனி உதவியாளராக உள்ளார். மேலும், உதயகுமாருக்குச் சொந்தமாக இலுப்பூர் அருகே மேட்டுச்சாலையில் உள்ள கல்லூரியையும் கவனித்து வருகிறார்.
மேலும், பெரும்பாலான நேரங்களில் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு உதவியாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.