‘‘தத்துவப் போர் தற்போது நடக்கிறது, தத்துவம் தோல்வி அடைந்தால் சமுதாயம் அழிந்துவிடும்,’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர் மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து பேசியதாவது:
சனாதன தர்மம், இந்தி மொழி, ஆர்ய கலாச்சாரத்தை நிலைநாட்ட தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ்.ஸின் முகம் தான் பாஜக. இந்தி திணிப்பால் இந்தியாவின் அனைத்து மொழிகளையும் அழித்துவிடும்.
மேற்கு வங்களாத்தில் பாஜக தேர்தல் அறிக்கையில் குடியுரிமை சட்டம் இடம்பெற்றிருப்பது இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காகவே. பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் பாஜக தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளாது.
ஆமை, அமினா புகுந்த வீடு உருப்படாது என்பது தமிழக பழமொழி. அதோடு பாஜக புகுந்த நாடும் உருப்படாது என சேர்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் ஆதரிப்பது மதசார்பற்ற முற்போக்கா ? மதவாத பிற்போக்கா ? திராவிட கலச்சாரமா ? சனாதன தர்மமா ? தமிழ் மொழியா ?இந்தி திணிப்பா ? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
தற்போது நடப்பது வேட்பாளர்களுக்கான சண்டை கிடையாது. மிகப் பெரிய தத்துவப் போர் நடக்கிறது. தத்துவம் தோல்வி அடைந்தால் சமுதாயம் அழிந்துவிடும். நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாக்களிக்க வேண்டும், என்று கூறினார்.