ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் நடிகை குஷ்புவுக்கு ஆதரவாக அவரது கணவரான திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு போட்டியிடுகிறார்.
அதன்படி, தொகுதி முழுவதும் குஷ்பு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், குஷ்புவுக்கு ஆதரவாக அவரது கணவரும் திரைப்பட இயக்குநருமான சுந்தர்.சி ஆயிரம் விளக்கு தொகுதியில் வீதி விதியாக பொது மக்களை சந்தித்து, அவர்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதுதொடர்பாக சுந்தர்.சி கூறியதாவது:
குஷ்புவின் உழைப்புக்கு கிடைத்த வெகுமதியாகவே அவருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்போதும் உண்டு. இதற்கு மேல் குஷ்புவுக்கு பணமோ, புகழோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை. இதை எல்லாம் கொடுத்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. குஷ்புவின் கணவன் என்ற முறையில் அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கவே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். வேறு எந்த பிரதிபலனும் எனக்கு தேவையில்லை. ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு சுந்தர்.சி கூறினார்.