ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் வருங்கால வைப்பு நிதி நிறுவன அமலாக்கப் பிரிவு பெண் அதிகாரி உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகம் எதிரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனஅலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த ஜி.லோகநாயகி, அமலாக்கப் பிரிவு அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இந்நிலையில், சட்ட விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க, திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் லோகநாயகி ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்நிறுவனத்துக்கு தொடர்புடைய சென்னை தி.நகரை சேர்ந்த ராகவி அசோசியேட்ஸ் நிறுவன நிர்வாகி சுரேஷ் மற்றும்அவரது உதவியாளர் ரமேஷ்பாபு ஆகியோர் ரூ.4 லட்சத்தை லோகநாயகியிடம் நேற்று முன்தினம் திருப்பூரில் அவரது அலுவலகத்தில் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஏற்கெனவே தகவலறிந்த சிபிஐ அதிகாரிகள் திருப்பூர் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அருகில் காத்திருந்தனர். சுரேஷ், ரமேஷ்பாபு ஆகியோர் பணத்தை கொடுத்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியில் வரும்போது, உடனடியாக அவர்களை மறித்து பிடித்த சிபிஐ அதிகாரிகள், அலுவலகத்துக்குள் சென்று சோதனையிட்டு லோகநாயகி அறையில் இருந்த ரூ.4 லட்சத்தை கைப்பற்றினர்.
திருப்பூர், கோவை, சென்னையில் லோகநாயகிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.6.10 லட்சம் மற்றும் சந்தேகத்துக்குரிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர். லோகநாயகி, சுரேஷ், ரமேஷ்பாபு நேற்று கைதுசெய்யப்பட்டு, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பூர் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மற்றொரு அதிகாரியின் அறையில் இருந்து கணக்கில் வராத தொகை ரூ.3 லட்சத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். அதுகுறித்தும் விசாரணை நடத்துகின்றனர்.