தமிழகத்தில் சாலையில் செல்லும் இருசக்கர வாகனத்தை திடீரென்று ஒரு போலீஸ்காரர் வழிமறிக்கிறார் என்றால், அவர் லைசென்ஸ் பரிசோதனை அல்லது பணத்துக்காக மட்டுமே வழிமறிப்பார் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது.
ஆனால்,போலீஸாரிலும் உதவி மனப்பான்மை கொண்ட பலர் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஆனிஅருண் என்பவர் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். ஆனால், தனது முகத்தை கடைசிவரை அவர் காட்டவில்லை.
புதுச்சேரியில் இருந்து தென்காசிக்கு இருசக்கர வாகனத்தில்அவர் பயணம் மேற்கொள்கிறார். ராமநாதபுரம் - தூத்துக்குடி கிழக்குகடற்கரை சாலையில், கடலாடி ஒன்றியத்தில் உள்ள இதம்பாடல்கிராமம் அருகே ஆனிஅருணை,போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தி (எண்: ஆர்.எம்.1986) வழிமறிக்கிறார்.
உரியவரிடம் ஒப்படைப்பு
ஒரு மருந்து பாட்டிலை கொடுத்து, முன்னால் வேகமாக செல்லும் அரசு பேருந்திலிருந்து பெண் பயணி ஒருவர் அந்த மருந்து பாட்டிலை தவறவிட்டுவிட்டார். பேருந்தை விரட்டிச் சென்று அந்த மருந்து பாட்டிலை உரியவரிடம் ஒப்படைக்குமாறு போலீஸ்காரர் கூறுகிறார்.
உடனே, இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று அந்த பேருந்தை மறித்து, மருந்து பாட்டிலை உரியவரிடம் ஆனிஅருண் ஒப்படைக்கிறார். அத்துடன் அந்தகாட்சி முடிந்துவிடுகிறது. யூடியூபில் பதிவான இந்த காட்சியை கடந்த 19 மணி நேரத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து, பாராட்டியுள்ளனர்.