தருமபுரி மாவட்டம் கடத்தூரில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமிக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ். 
தமிழகம்

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு திமுக-வினர் வாக்களிப்பர்: தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு திமுக வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர் என தருமபுரியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவை தொகுதிகளில் அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பாமக-வின் மாநில இளைஞரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடத்தூர், நல்லம்பள்ளி, இண்டூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசினார். நல்லம்பள்ளியில் பாமக வேட்பாளர் வெங்கடேஸ்வரனுக்கு ஆதரவு கேட்டு வாகனத்தில் இருந்தபடி அவர் பேசியது:

நம் கூட்டணி சமூக நீதி கூட்டணி. வெற்றிக் கூட்டணி. 40 ஆண்டு கால போராட்டம், தியாகம் ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றி வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு. இதுபோலவே, இதர பிற்பட்ட சமுதாயத்தினருக்கும் தனி இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதுதான் சமூக நீதி.

இந்த தேர்தல் ஒரு விவசாயிக்கும், அரசியல் வியாபாரிக்கும் நடக்கும் தேர்தல். இதில், நம்மில் ஒருவரான விவசாயி வெற்றி பெற்றாக வேண்டும். ஸ்டாலினுக்கு அரசியல், சமூக நீதி, சமத்துவம், வரலாறு, சரித்திரம், கணக்கு எதுவுமே தெரியாது. கருணாநிதியின் மகன் என்ற ஒரு தகுதி மட்டுமே உள்ளது.

ஸ்டாலின் தன் கட்சிக்காரர்களை நம்பவில்லை. பிஹாரில் இருந்து பிரசாந்த் கிஷோர் என்பவரை அழைத்து வந்து, தன்னை முதல்வராக்க கூலி கொடுத்துள்ளார். இதனால் ஸ்டாலின் மீது கோபத்தில் உள்ள திமுக-வினர் பலர் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க உள்ளனர்.இவ்வாறு பேசினார்.

SCROLL FOR NEXT