பெரம்பூர் அருகே எம்கேபி நகரில் அதிமுக கூட்டணி கட்சியின் பெரம்பூர் தொகுதி வேட்பாளர் என்.ஆர்.தனபாலனை அரிவாளால் வெட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். நேற்று அவர் தனது ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். வியாசர்பாடி உதய சூரியன் நகரில் நேற்று காலையில் பிரச்சாரம் செய்தார். அவருடன், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் 200 பேர் இருந்தனர். அப்போது, தொண்டர்கள் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு திடீரென என்.ஆர்.தனபாலனை வெட்ட முயன்றார்.
அப்போது என்.ஆர்.தனபாலன் சுதாரித்துக் கொண்டு சற்று விலகினார். அரிவாளால் வெட்ட முயன்ற நபரை அருகே இருந்த அதிமுக நிர்வாகி சிவக்குமார் என்பவர் தடுக்க முயன்றார். உடனே அந்த நபர் சிவக்குமாரின் கையில் வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கட்சியினர் சேர்ந்து சிவக்குமாரை மீட்டு, எருக்கஞ்சேரியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அனைவரும் ஒன்று சேர்ந்து, எம்கேபி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, தனபாலனை கொல்ல முயன்ற நபரை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சம்பவம் குறித்து புகார் மனுவும் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, என்.ஆர்.தனபாலன் கூறும்போது, ‘வெற்றி வாய்ப்பு எங்களுக்கு பிரகாசமாக உள்ளது. அது பிடிக்காத திமுகவினர் என்னை கொல்லப் பார்க்கின்றனர். பிரச்சாரத்தில், வேட்பாளருக்கு போதிய பாதுகாப்பு இல்லை’ என்று கூறினார்