உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தந்தைக்காக தனது 8 மாத கைக் குழந்தையுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் வில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மகள் திவ்யா.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் போட்டியிடுகிறார். இவர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் பிரச்சாரம் செய்ய முடியவில்லை.
இதையடுத்து அவரது மகள் திவ்யா களத்தில் இறங்கியுள்ளார். அம்பத்தூரில் கணவர், மற்றும் 8 மாத ஆண் குழந்தையுடன் வசித்து வந்த திவ்யா, தந்தையைப் பார்க்க கடந்த வாரம் ஊருக்கு வந்தார். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் தனது கைக்குழந்தையுடன் தந்தைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வாகன நிறுத்துமிடம் அமைத்துக் கொடுப்பது, திருமுக் குளம் குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைப்பது, பிளவக்கல் அணையை சீரமைத்து சிறந்த சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவது, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவது, 5 ஆண்டு ஊதியம் முழுவதையும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது எனத் தந்தையின் வாக்குறுதிகளை மக்களிடம் விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் திவ்யா.