மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க ஜாக்டாவில் இடம்பெற்றுள்ள 18 ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இயற்கைப் பேரிடரான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளுக்கு ஆசிரியர்களின் பங்களிப்பை வழங்கும் வகையில் ஒருநாள் ஊதியத்தை வழங்க ஜாக்டாவில் இடம்பெற்றுள்ள 18 ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
எனவே, எங்களின் ஒருநாள் சம்பளப் பிடித்த தீர்மானத்தினை தாங்கள் ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கவும், பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை முதல்வரின் பொது நிவாரண நிதியில் சேர்க்க உதவுமாறும் ஜாக்டா சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.