கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜு நேற்று கயத்தாறு அருகே வெள்ளாங்கோட்டை, வலசால்பட்டி, சூரியமினுக்கன், திருமங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார்.
வெள்ளாங்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது முதல்வரோ, அமைச்சர்களோ, கட்சியினரோ வீண்பழி சுமத்தவில்லை. இயற்கையாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை. 78 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.இது ஊர் அறிந்த உண்மை. அப்போது முதல்வராக இருந்தது ஓபிஎஸ் தான். பல்வேறு விமர்சனங்கள் வந்ததால், வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதற்காகத் தான் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம்.
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தது திமுக தான். அதன் விரிவாக்கத்துக்கு கையெழுத்திட்டது ஸ்டாலின் தான். அந்த வருமானம் நின்று போய் விட்டதே என்ற வருத்தத்தில் அவர் கூறுகிறார்.
அங்கு ஒரு அசம்பாவிதம் நடந்தது. எதிர்பாராதவிதமாக தூண்டிவிடப்பட்டு மக்கள் வம்பாக உயிரிழந்தனர். அது விரும்த்தகாத சம்பவம். அதற்கு என்ன நிவாரணமோ அதனை அரசு செய்தது. உடனடியாக அந்த ஆலையை அதிமுக அரசு மூடியது. கோவில்பட்டியை தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதை முதல்வரிடம் வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.