வேலூர் ஜெயராம் செட்டித்தெருவில் உள்ள ஒரு முதியவரின் வீட்டுக்கு தபால் வாக்கு படிவத்தை வழங்கிய தேர்தல் பணி குழுவினர். படம்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் சென்று முதியோர்களின் வீடுகளில் தபால் வாக்குகள் சேகரிப்பு

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உதவியுடன் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. கரோனா பரவல் அச்சம் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கான விருப்ப மனுக்கள் கடந்த வாரம் பெறப்பட்ட நிலையில், நேற்று முதல் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உதவியுடன் வீடு, வீடாகச் சென்று தபால் வாக்குகள் பெறும் பணி நேற்று தொடங்கியது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் 7,124 பேர், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 24 ஆயிரத்து 485 பேர் தபால் வாக்குகள் அளிக்க தகுதியானவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். இதில், மாற்றுத்திறனாளிகள் 531 பேரும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 2,629 பேர் என மொத்தம் 3 ஆயிரத்து 160 பேர் தபால் வாக்குகள் அளிக்க விருப்பம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று முதல் தபால் வாக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் 10 முதல் 15 குழுக்கள் என 58 குழுக்கள் இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் தபால் வாக்குகள் அளிக்க விருப்பம் தெரிவித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகளை பெற்று சீலிடப்பட்ட பெட்டியில் சேகரித்தனர்.

விடுபட்ட நபர்களுக்கு வரும் 27-ம் தேதி தபால் வாக்குகள் பெற உள்ளனர்.

SCROLL FOR NEXT