ஆட்சியர் திவ்யதர்ஷினி, எஸ்.பி. மயில்வாகனன் | கோப்புப் படம். 
தமிழகம்

திருச்சி மாவட்ட ஆட்சியர், உதவி ஆட்சியர், எஸ்.பி. கூண்டோடு மாற்றம்: தேர்தல் ஆணையப் பார்வையாளர் பரிந்துரையில் உத்தரவு

செய்திப்பிரிவு

தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு வருகிறது. திருச்சியில் ஒரு கோடி ரூபாய் பணம் பிடிபட்ட விவகாரத்தில் தேர்தல் பார்வையாளர் அறிக்கையை அடுத்து தற்போது திருச்சி ஆட்சியர், உதவி ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணையச் செயலர் மலய் மாலிக், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கீழ்க்காணும் அதிகாரிகளை மாற்றம் செய்தும் அந்த இடத்தில் புதிய அதிகாரிகள் யாரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மாற்றப்பட்ட திருச்சி ஆட்சியர், துணை ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோரைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில் திருச்சியில் ரூ.1 கோடி பணம் பிடிபட்ட விவகாரம் குறித்து சிறப்புத் தேர்தல் பார்வையாளர் அளித்த தகவலின் அடிப்படியில் கீழ்க்கண்டவர்களை மாற்றம் செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிவராசு ஆட்சியர் -- ராஜன் எஸ்.பி

மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் விவரம்:

திருச்சி மாவட்டக் கண்காணிப்பாளர் பி.ராஜன் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட வேண்டும்.

திருச்சி தலைமையிடத் துணை ஆணையராகப் பணியாற்றும் மயில்வாகனனை திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்க வேண்டும்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக உள்ள எ.சிவராசுவை மாற்றித் தேர்தல் அல்லாத பணியில் அமர்த்த வேண்டும்.

திருச்சியின் புதிய ஆட்சியராக திவ்யதர்ஷினியை நியமிக்க வேண்டும்.

திருச்சி மாவட்ட உதவி ஆட்சியராகப் பதவி வகிக்கும் நிஷாந்த் கிருஷ்ணா மாற்றப்பட்டு தேர்தல் அல்லாத பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

திருச்சி உதவி ஆட்சியராக விஷு மஹாஜனை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT