திருமாவளவன் | கோப்புப் படம். 
தமிழகம்

பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் புதுச்சேரிக்கு மிகப்பெரிய ஆபத்து: திருமாவளவன் எச்சரிக்கை

அ.முன்னடியான்

பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் புதுச்சேரிக்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்துள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், உழவர்கரை தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேட்பாளர் அங்காளன் (எ) தேவ.பொழிலன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து உழவர்கரை சமுதாய நலக்கூடம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (மார்ச் 25) பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

‘‘புதுச்சேரி அரசியல் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். புதுச்சேரி மாநிலத்தை பாஜக குறிவைத்துள்ளது. 5 ஆண்டு காலம் நாராயணசாமிக்குக் கடுமையான நெருக்கடியை கிரண்பேடி மூலமாக பாஜக கொடுத்தது. அவரை திடீரென்று மாற்றிவிட்டு, தமிழிசை சவுந்தரராஜனைப் பொறுப்பு ஆளுநராக நியமித்துள்ளது.

தொடர்ச்சியாக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை சதிவேலை செய்து கவிழ்த்துவிட்டது. எப்படிப்பட்ட அநாகரிக அரசியலையும் செய்வோம். அதற்கு தயங்கவோ, வெட்கப்படவோ மாட்டோம் என்கிற அளவுக்கு அருவருப்பான அரசியல் செய்யக்கூடிய ஒரு கட்சிதான் பாஜக. அவர்கள் ஒருவேலை தப்பித்தவறி ஆட்சிக்கு வரும் நிலை, ஏற்பட்டால் புதுச்சேரியை யாராலும் காப்பாற்ற முடியாது. அவ்வளவு மோசமான அரசியல் செய்யக்கூடிய பாஜகவுக்கு என்.ஆர்.காங்கிரஸும், அதிமுகவும் துணைபோயுள்ளனர்.

மறைமுகமாக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைத் தாண்டி வெளிப்படையாகவே நாங்கள் புதுச்சேரியைக் கைப்பற்றுவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக செயல்படுகிறது. அவர்களின் முயற்சியைத் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முறியடித்தே ஆக வேண்டும் என்ற உறுதிமொழியை நாம் எடுத்துள்ளோம்.

காங்கிரஸுக்கும்-என்.ஆர்.காங்கிரஸுக்கும், அதிமுகவுக்கும் - திமுகவுக்கும் போட்டியிருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், பாஜக என்கின்ற மதவாத கட்சி, தமிழர்களுக்கு எதிரான கட்சி. ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தான கட்சி. தமிழகத்தில், புதுச்சேரியில் காலூன்றினால் என்னவாகும் என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பாஜக வடமாநிலங்களில் என்னென்ன அநீதிகளைச் செய்ததோ, அதனையே தமிழகம், புதுச்சேரியில் செய்யக் காத்திருக்கிறது. அதற்கு ஒருபோதும் நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. அதற்காகத்தான் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த 5 ஆண்டுகளாகக் கைகோர்த்துள்ளது.

எப்படியாவது ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிடவேண்டும் என்று சதித்திட்டங்களைத் தீட்டி வருகின்றனர். பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி இங்கே வந்துவிட்டால் புதுச்சேரிக்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற போராட காங்கிரஸ்-திமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு இத்தொகுதியில் விசிக வெற்றி பெற வேண்டும். இக்கூட்டணியின் வெற்றிக்கு அனைத்துத் தொகுதிகளிலும், நீங்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.’’

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

SCROLL FOR NEXT