தமிழக மக்களின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசிடம் அதிமுக அடகு வைத்துவிட்டது என உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
தூத்துக்குடியில் செல்லாத ரூபாய் நோட்டு, செங்கல் மற்றும் படங்களை காட்டி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நூதனமான முறையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெ.கீதாஜீவனை ஆதரித்து தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் திறந்த வேனில் நின்றவாறு அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டதை எடுத்துக் கூறிய உதயநிதி ஸ்டாலின், மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 1000 ரூபாய் நோட்டை எடுத்துக் காட்டினார். இந்த செல்லாத நோட்டை போல பிரதமர் மோடி, முதல்வர் பழனிச்சாமி ஆகியோரை செல்லாதவர்களாக்க வேண்டும் என கூறினார்.
அதுபோல மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எதுவும் நடைபெறாததை சுட்டிக் காட்டிய உதயநிதி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையே கையோடு தூக்கி வந்துவிட்டேன் எனக் கூறி எய்ம்ஸ் என எழுதப்பட்டிருந்த ஒரு செங்கலை தூக்கிக் காட்டினார். இதற்கான செலவாக ரூ.75 கோடி கணக்கு காட்டியிருக்கிறார்கள். அங்கே இருந்தது ஒரே ஒரு செங்கல் தான். அதையும் நான் தூக்கி வந்துவிட்டேன். இதனால் கடந்த 2 நாட்களாக மருத்துவமனையை காணவில்லை என தேடுகிறார்களாம் என நக்கலாக தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.
தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமி எவ்வாறு முதல்வரானார் என்பதை குறிப்பிட்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் சில படங்களை எடுத்து காட்டினார். உதயநிதி ஸ்டாலின் செல்லாத நோட்டு, செங்கல் மற்றும் படங்களை காட்டிய போது மக்கள் ஆரவாரம் செய்தனர்.
மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மறக்காமல் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், இந்த சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரது பெயர்களையும் குறிப்பிட்டு இந்த கொடூர கொலைக்கு பழி வாங்க வேண்டாமா. இந்தத் தேர்தலில் இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
ஜிஎஸ்டி வரியாக இதுவரை ரூ. 15,000 கோடியை மத்திய அரசுக்கு கொடுத்துள்ளோம். அதை திருப்பிகேட்டால், நிதி நெருக்கடி இருப்பதால் தர முடியாது என்கிறார்கள். ஆனால், பிரதமர் செல்வதற்காக ரூ.8,000 கோடியில் 2 சொகுசு விமானங்களை வாங்கியுள்ளனர். ரூ.10 ஆயிரம் கோடியில் புதிய நாடாளுமன்றம் கட்டப் போகிறார்களாம்.
அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு, பாஜகவுக்கானது என்பதை மறந்துவிடக் கூடாது. தமிழக மக்களின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசிடம் அதிமுக அரசு அடகு வைத்துவிட்டது. நமது கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை கொண்டுவந்ததால தமிழகத்தில் மட்டும் 14 மாணவ, மாணவியர் இதுவரை இறந்துள்ளனர். இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேண்டும். எனவே, திமுக கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
இதேபோல் திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் திமுக வேட்பாளர் ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோரை ஆதரித்தும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.