சரத்குமார் பிரச்சாரம். 
தமிழகம்

நானும் கமலும் கலைச் சேவை செய்துவிட்டு சொந்தப் பணத்தில் மக்கள் சேவை செய்ய வந்துள்ளோம்; முதல்வராக ஆசை: சரத்குமார் பேச்சு

டி.ஜி.ரகுபதி

எங்களது கூட்டணி முயற்சி ஒரு விதைதான் எனவும், விரைவில் அது விருட்சமாக மாறும் எனவும், சரத்குமார் தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று (மார்ச் 25) பிரச்சாரம் செய்தார். உடையாம்பாளையம், உப்பிலிபாளையம் உள்ளிட்ட இடங்களில் வேன் மூலமாகச் சென்றும், நடந்து சென்றும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பேசியதாவது:

"இதுவரை தமிழகத்தில் இருந்த அரசியல் கட்சியினர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவில்லை. அவர்கள் அரசியலை ஒரு வியாபாரமாகப் பார்க்கின்றனர். ஆனால், நானும், கமல்ஹாசனும், கலைச் சேவை செய்துவிட்டு, எங்களது சொந்தப் பணத்தில் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என வந்துள்ளோம்.

எனக்கு 25 ஆண்டு கால அரசியல் அனுபவம் இருக்கிறது. அப்போது தொலைக்காட்சிகள், ஊடகங்கள் அதிக அளவில் இல்லாததால், எனது போராட்டங்கள், சேவைகள் மக்களைச் சரியாகச் சென்றடையவில்லை. எனது அரசியல் பயணம் நீண்ட நெடிய பயணம்.

திமுக, அதிமுகவில் இருந்துள்ளேன். நான் வீடு வீடாக பேப்பர் போட்டு, சைக்கிள் கடையில் வேலை பார்த்து, நடிகனாகி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்த மரியாதையின் காரணமாகவே, நான் 10 ஆண்டுகாலம் அதிமுகவுடன் இருந்தேன்.

ஓட்டு வாங்குவதற்காக, சாதி தலைவர்களை உருவாக்கி மக்களைப் பிரித்தது இந்த திராவிட இயக்கங்கள்தான். எங்கள் கூட்டணி முயற்சி ஒரு விதைதான். இது விரைவில் விருட்சமாக மாறும். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், கமல்ஹாசனுக்கு என்ன அனுபவம் உள்ளது எனக் கேட்கின்றார். நான் எம்எல்ஏ ஆனபோது, எனக்கு அனுபவம் இல்லை. ஆனால், நான் சிறப்பாகப் பணியாற்றினேன். அதேபோல், கமல்ஹாசனும் சிறப்பாகப் பணியாற்றுவார்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டு காலத்துக்கு மேலாகியும், இன்னமும் சாக்கடை வீட்டுக்கு முன்பாகத்தான் ஓடுகின்றது. கோவையில் இன்னும் சரியான சாக்கடை வசதி இல்லை. பணம் வாங்கிக்கொண்டு வாக்கு அளித்தால், வருங்காலத் தலைமுறை ஏமாந்து போகும்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில், காவல்துறையினர் பணியின்போது உயிரிழந்தால், ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், காவல்துறையினரையே மிரட்டுகின்றார். இப்போதே இப்படி மிரட்டுபவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனக்கும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதைக் காலம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். தற்போது எங்களது நோக்கம், இங்குள்ள இரு கட்சிகளையும் அகற்ற வேண்டும் என்பதுதான்".

இவ்வாறு சரத்குமார் பேசினார்.

SCROLL FOR NEXT