தமிழகம்

உதகையில் பாஜகவுக்கு ஆதரவாக வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம்: மூதாட்டி 'கை' சின்னத்தைக் காட்டியதால் சிரிப்பலை 

ஆர்.டி.சிவசங்கர்

உதகையில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்ட வேலூர் இப்ராஹிம், மூதாட்டி ஒருவரிடம் நமது சின்னம் என்ன என்று கேட்க, அவர் 'கை' சின்னம் என்றதும் அப்பகுதியில் சிரிப்பலை எழுந்தது.

நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. கோத்தகிரியைச் சேர்ந்த மு.போஜராஜன் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மு.போஜராஜனுக்கு ஆதரவாக தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் தலைவர் வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

உதகை ஏடிசி, மத்தியப் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். அவர் பேசும்போது, ''காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் மதச்சார்பின்மை என்ற பெயரில் இஸ்லாமியர்களை ஏமாற்றி வருகின்றன. பாஜக மட்டுமே சிறுபான்மையினரைப் பாதுகாக்கிறது.

கடந்த காலங்களில் திமுக ஆட்சியில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து நடந்து வந்தது. ஆட்சிக்கு வந்து விடுவோம் என்ற கருத்துக்கணிப்பைத் திணித்து, காவல்துறையினரையே தாக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் அரங்கேறியது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு, ஏன் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. திமுக நிலங்களை அபகரிக்கும் கட்சி. இந்து மதத்தைச் சிதைத்து, கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்துபவர்கள் அவர்கள்.

அதிமுக ஆட்சியில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணக்கத்துடன் உள்ளனர். பாஜக அரசு ரூ.3,700 கோடி நிதி ஒதுக்கி சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்டுள்ளது. அதிமுக அரசு ஹஜ் செல்ல மானியம், உமாக்கள், வாகனங்கள் வாங்க மானியம், ஊதிய உயர்வு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் அமைதியான ஆட்சி நடக்கிறது. மத்திய அரசிடம் நல்லிணக்கமாக உள்ளதால் தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்தகைய நல்லாட்சி தொடர வேண்டும்'' என்று தெரிவித்தார்.

துண்டுப் பிரசுரம் விநியோகம்

இந்நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் லோயர் பஜார், மெயின் பஜார் பகுதிகளில் வேலூர் இப்ராஹிம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி மக்களிடம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார்.

அப்போது, அப்பகுதியில் ஒரு மூதாட்டியிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி, 'நமது சின்னம் என்ன?' என்று கேட்டார். அதற்கு அந்த மூதாட்டி யோசிக்காமல் 'கை' சின்னம் என பதிலளிக்க அருகில் இருந்தவர்கள் சிரிப்பலையில் மூழ்கினர். உடனே சுதாரித்துக் கொண்ட இப்ராஹிம், அங்கிருந்து நகர்ந்தார். மேலும், அங்குள்ள வியாபாரிகளிடம், மோடி மற்றும் பாஜகவின் சாதனைகளை விளக்கினார்.

பிரச்சாரத்தின்போது, கூட்டணிக் கட்சிகளான பாமக, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் மட்டுமே உடனிருந்தனர். அதிமுக சார்பில் நிர்வாகிகள் மட்டுமல்லாமல், தொண்டர்களுமே வரவில்லை. பெயரளவுக்குப் பிரச்சார வாகனத்தில் அதிமுகவின் ஒரே ஒரு கொடி மட்டுமே கட்டப்பட்டிருந்தது. வேலூர் இப்ராஹிமின் பாதுகாப்புக்காக அதிரடிப் படையினர் மற்றும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT