புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 2-வது முறையாக உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்லப்பட்ட 6 கிலோ தங்க நகைகளைத் தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் விதிமீறல்கள் குறித்து கண்காணிப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர், நிலையான வீடியோ கண்காணிப்புக் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட புறநகர் பகுதியான கேப்பறை எனும் இடத்தில் நிலையான கண்காணிப்புக் குழுவினர் இன்று (மார்ச் 25) வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஒரு பிரபல நகைக்கடைக்குச் சொந்தமான நகைகள், பல்வேறு இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்கு விநியோகிப்பதற்காக மேட்டூர் பகுதியில் இருந்து தஞ்சாவூர் பகுதிக்கு சென்றுவிட்டு புதுக்கோட்டை நோக்கி வந்தது தெரியவந்தது.
எனினும், உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பிலான 6 கிலோ தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நகைகளைக் கொண்டு வந்த ராஜேஷ் கண்ணன் என்பவரிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிகுமார் விசாரித்து வருகிறார்.
இதேபோன்று, கந்தர்வக்கோட்டை அருகே உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்லப்பட்ட ரூ.5.91 கோடி மதிப்பிலான சுமார் 34 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.