தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி. 
தமிழகம்

வயதானவர்கள் வீடு தேடி சென்று முதல்முறையாக வாக்குப்பதிவு தொடக்கம்; புதுச்சேரியில் கிராமங்களில் மூத்த வாக்காளர்களை குறிவைக்கும் கட்சியினர்

செ.ஞானபிரகாஷ்

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கரோனா நோயாளிகள் ஆகியோரின் முகவரிக்கு சென்று தபால் வாக்கு பெறும் பணி புதுச்சேரியில் முதல் முறையாக இன்று தொடங்கியது. ஒரு வாக்குப் பதிவு செய்ய அரை மணிநேரம் ஆனது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளை தேடி தேர்தல் துறையினர் வாக்கு பெற வருவதை அறிந்து கிராமங்களில் இவர்களை அரசியல் கட்சியினர் குறிவைக்க தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரியில் வாக்களிக்க வர இயலாத வாக்காளர்களை அடையாம் கண்டு தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட 2,419 பேர், மாற்றுத்திறனாளிகள் 1,149 பேர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் 19 பேர், மருத்துவமனையில் உள்ள கரோனா நோயாளிகள் 4 பேர், அத்தியாவசிய பணியில் உள்ளோர் 24 பேர் என 3,605 பேர் தபால் வாக்கு பெற விண்ணப்பித்திருந்தனர்.

இதில், 80 வயதுக்கு மேற்பட்டோர், கரோனா நோயாளிகள் ஆகியோர் தந்த முகவரிக்கு சென்று தபால் வாக்கு பெறும் பணி இன்று (மார்ச் 25) தொடங்கியது. இதற்காக தனியாக 31 வாக்குப்பதிவு அதிகாரிகளுக்கு தனியாக வாகனம், வாக்குப்பெட்டி ஆகியவை தரப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் விருப்ப மனுவில் தந்துள்ள செல்போனில் வீட்டுக்கு வரும் நேரம், தேதி விவரம் தெரிவிக்கப்பட்டு உதவி தேர்தல் அதிகாரி தலைமையில் 10 பேர் கொண்ட குழு வீடுகளுக்கு செல்கிறது.

அங்கு முதியோர் உடன் இருக்கும் குடும்பத்தின் உதவியுடன் தேர்தல் வாக்களிப்பு முறைகளை தெரிவிக்கின்றனர். அதையடுத்து, வாக்கு சீட்டு தரப்படுகிறது. வாக்கு பெட்டியும் வீட்டில் வைக்கப்பட்டது. தனது குடும்ப உறுப்பினர் உதவியுடனோ, தன்னிச்சையாகவோ வாக்கு சீட்டில் முத்திரையிட்டு பெட்டியில் போடுகிறார். அரை மணி நேரம் ஒரு வாக்கு பெற பணிபுரிந்தனர். இவை வீடியோவாகவும் பதிவு செய்யப்படுகிறது. வரும் 4-ம் தேதி வரை இப்பணி நடைபெற உள்ளது.

கிராமங்களில் குறிவைக்கும் கட்சியினர்

வயது முதிர்ந்தோரை வீடு தேடி வந்து வாக்குப்பதிவு நடப்பதை அறிந்து கிராமப்பகுதிகளில் அரசியல் கட்சியினர் அவர்களை குறிவைத்து வாக்கு கோரி பிரச்சாரமும் அதிகளவில் செய்ய தொடங்கியுள்ளனர். தற்போது 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் விவரங்களை தொகுதி வாரியாக அரசியல் கட்சியினர் சேகரித்து முழு வீச்சில் நாட தொடங்கியுள்ளனர்.

SCROLL FOR NEXT