குழந்தைகள் இறந்த தடுப்பணை 
தமிழகம்

தடுப்பணையைச் சரிவரக் கட்டாததாலேயே 3 குழந்தைகள் உயிரிழப்பு: குன்னம் திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

பெ.பாரதி

தடுப்பணையைச் சரிவரக் கட்டாததாலேயே அங்கு தேங்கிய சேற்றில் சிக்கி 3 குழந்தைகள் உயிரிழந்ததாக திமுக மாவட்டச் செயலாளரும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள மணப்பதூர் கிராமத்தில் ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைச் சேற்றில் சிக்கி சுருதி (9), சுடர்விழி (7), ரோகித் (7) ஆகிய 3 சிறுவர்கள் நேற்று உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று, அந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்திய திமுக மாவட்டச் செயலாளரும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில், ''100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் ரூ.15.92 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவசர அவசரமாக இந்தத் தடுப்பணை, தரமற்றுக் கட்டப்பட்டுள்ளது. இதன் ஒரு பக்கச் சுவர் ஓரிரு மாதங்களில் இடிந்து விழுந்துள்ளது.

அதன் காரணமாக அவ்வழியே தொடர்ந்து தண்ணீர் வெளியேறியதால் சுமார் 10 அடி ஆழத்துக்குப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு சேறு உண்டாகியுள்ளது. இதன் காரணமாகவே சிறுவர்கள் அதில் சிக்கி, வெளியே வரமுடியாமல் உயிரிழந்துள்ளனர். தடுப்பணை முறையாகக் கட்டப்பட்டிருந்தாலோ, அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்திருந்தாலோ இச்சம்பவம் நிகழ்ந்திருக்காது'' எனக் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரித்தபோது, ''தடுப்பணை கட்டப்பட்ட உடனே ஆய்வு செய்யப்பட்டது. தரமாகவே தடுப்பணை கட்டப்பட்டது. தொடர் மழையின் காரணமாக தடுப்பணையில் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டதால் சுவர் இடிந்துவிட்டது. அதன் மீது மரம் விழுந்ததும் ஒரு காரணம்.

தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டிருந்ததாலும், தற்போது அப்பகுதியில் தண்ணீர் நிற்பதாலும் சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. கோடையில் சீரமைக்கலாம் என இருந்த சமயத்தில் இப்படி ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் குறித்து ஆய்வு செய்யப்படும்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT