நல்லாட்சி எது என்று தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளான வாக்காளர்கள், வரும் தேர்தலில் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என தருமபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழகத் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசினார்.
தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களான கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஜி.கே.மணி (பென்னாகரம்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி) மற்றும் சம்பத்குமார் (அரூர்) ஆகியோருக்கு ஆதரவு கேட்டு நேற்று இரவு தருமபுரி 4 சாலை சந்திப்புப் பகுதியில் தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாகனத்தில் இருந்தபடியே பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, ''தொலைநோக்குத் திட்டங்கள் பலவற்றைத் தமிழகத்தில் நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு. பெண்கள், விவசாயிகள் எனப் பல்வேறு தரப்பினரின் நல்வாழ்வுக்குப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நல்ல ஆட்சி தந்தது யார் என்ற தீர்ப்பை வழங்கும் நீதிபதிகள் வாக்காளர்கள்தான். எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நல்ல தீர்ப்பை வழங்குங்கள்.
திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ள நோட்டு, அது செல்லாது. அதிமுகவின் தேர்தல் அறிக்கைதான் நல்ல நோட்டு. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் திருமண நிதி உதவி, மகப்பேறு நிதி உதவி ஆகியவை உயர்த்தி வழங்கப்படும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எதுவும் நடைபெறவில்லை என ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், சுற்றுச்சுவர் அமைத்தல், நிலம் சமன்படுத்துதல் உள்ளிட்ட பல பணிகள் நடந்துள்ளன. தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பான அரசாக இருப்பது அதிமுகதான். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை, வரும் தேர்தலில் வெற்றி பெறச் செய்யுங்கள்'' என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.