சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் பின்வாங்கியதால் வேட்பாளர் மருதுஅழகுராஜ் விரக்தியில் உள்ளார்.
திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏ கே.ஆர்.பெரியகருப்பனும், அதிமுக சார்பில் மாநில செய்தித் தொடர்பாளர் மருதுஅழகுராஜூம், அமமுக சார்பில் முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.கே.உமாதேவனும் போட்டியிடுகின்றனர்.
தொடக்கத்தில் வேட்பாளருக்கு தடபுடலான வரவேற்பு, தொடர் வாக்குச் சேகரிப்பு என அதிமுக நிர்வாகிகள் ஆர்வமாக ஈடுபட்டு வந்தனர்.
தற்போது பிரச்சாரம் தீவிரமடைந்தநிலையில் திடீரென ஒன்றியச் செயலாளர் நிலையில் உள்ள சில நிர்வாகிகள் வாக்குச் சேகரிப்பில் ஆர்வம் காட்டாமல் பின்வாங்க தொடங்கியுள்ளனர். இதனால் வேட்பாளர் பிரச்சாரம், தேர்தல் பணி குறித்த விபரம் கிளை நிர்வாகிகளுக்கு செல்வதில்லை. இதை அறிந்த வேட்பாளர் மருதுஅழகுராஜ் விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
மேலும் அவரது ஆதரவாளர்கள், தேர்தல் பணிக்கு ஒத்துழைக்காத அதிமுக நிர்வாகிகள் குறித்து தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து மருதுஅழகுராஜ் ஆதாரவாளர் ஒருவர் கூறுகையில், ‘‘மூன்று முறை வென்ற திமுக எம்எல்ஏ கே.ஆர்.பெரியகருப்பனை தோல்வி அடைய செய்யவே மருதுஅழகுராஜை முதல்வரும், துணை முதல்வரும் நிறுத்தியுள்ளனர். மேலும் மருதுஅழகுராஜ் வென்றால் தங்களுக்கு போட்டியாக வந்துவிடுவார் என மாவட்ட நிர்வாகிகள் சிலர், திருப்பத்தூர் தொகுதி நிர்வாகிகளை தேர்தல் வேலை செய்யவிடாமல் தடுக்கின்றனர். ஏற்கனவே அதிமுக நிர்வாகிகளின் உள்ளடி வேலையால் தான் அதிமுக தொடர்ந்து 3 முறை தோல்வி அடைந்தது.
அதேநிலை மீண்டும் ஏற்பட்டதால், இனி அதிமுகவிற்கு திருப்பத்தூர் தொகுதி கிடைப்பது சிரமம் தான். இதுகுறித்து தலைமைக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்'', என்று கூறினார்.