கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, அரசு மருத்துவர்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர்.
கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளைப் போடும் பணி கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக சுகாதாரம், காவல், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கும், 2-வது கட்டமாககடந்த 1-ம் தேதி முதல் 60 வயதுக்குமேற்பட்டவர்கள், 45 வயது முதல்59 வயது வரையுள்ள இணை நோய்பாதிப்புள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கோவேக்சின் தடுப்பூசி முதல்தவணை போட்டு 28 நாட்கள் இடைவெளியில் 2-ம் தவணையும், கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணைபோட்டு 56 நாட்கள் இடைவெளியில் 2-ம் தவணையும் போடப்படுகிறது.ஏப்.1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசுபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை சார்பில் கரோனா தடுப்பூசி பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நேற்று சைக்கிள்பேரணி நடத்தப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் இருந்து 5 கிமீ வரை நடைபெற்ற பேரணியில் மருத்துவமனை ஒருங்கிணைப்பு அதிகாரியான மருத்துவர் ஆனந்த்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்றனர். மருத்துவமனை இயக்குநர் விமலா பேரணியை தொடங்கி வைத்தார்.
இந்த சைக்கிள் பேரணி குறித்துமருத்துவமனை ஒருங்கிணைப்பு அதிகாரி மருத்துவர் வி.ஆனந்த்குமார் கூறும்போது, “கரோனா தொற்று 2-வது அலை ஆபத்து உள்ளதால் அரசு அனுமதித்துள்ள வயது பிரிவினர் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி மிகவும் பயனுள்ளது.ஆபத்து இல்லாதது. இந்தியா முழுவதும் 5 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.
அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படுகிறது. தடுப்பூசி போடுவதால் உயிரிழப்பை தடுக்க முடியும். தடுப்பூசி போட்டுக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். கரோனா வைரஸை எதிர்கொள்ளும்” என்றார்.