தமிழகம்

மழை பாதிப்பு: 84 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவித்த பெரும்பாக்கம் மக்கள்

ஜுபைதா ஹமீது

அண்மையில் பெய்த பெருமழை, சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக முடக்கிப் போட்டது. அந்தவகையில் சென்னை பெரும்பாக்கம் மக்கள் தொடர்ச்சியாக 84 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பெரும் சிரமத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

பெரும்பாக்கம் காந்திநகர் சொசைட்டியில் உள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ராஜன் தாங்கள் அனுபவித்த இன்னல்களை 'தி இந்து' விடம் விவரித்தார்.

"ஒரு தீவில் சிக்கிக்கொண்டதுபோல் உணர்ந்தோம். கார் பார்க்கிங் பகுதி நீரில் மூழ்கியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் வீட்டினுள் முடங்கிப்போனோம். பாம்புகளும் விஷ பூச்சிகளும் வீட்டுக்குள் வந்தன. செல்போன்கள் செயலிழந்தன" என அவர் கூறினார்.

அதே குடியிருப்பில் பாதுகாவலராக பணிபுரியும் லட்சுமண் டிஸ்ஸி கூறும்போது, "இப்போது நினைத்துப் பார்த்தாலும் அது ஒரு கெட்ட கனவு போல் இருக்கிறது. நேபாளத்தில் இருந்து கடந்த ஆகஸ்டில்தான் சென்னை வந்தேன். சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் என அனைவரும் கூறினார். ஆனால், அதற்கு எதிர்மறையாக இங்கு இப்படி ஒரு வெள்ளம் ஏற்படும் என நான் சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. 3 நாட்கள் மின்சாரம் இல்லை. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால் மாடிப்படியில் படுத்து உறங்கினேன். அதிர்ஷ்டவசமாக என்னிடம் கொஞ்சம் அரிசியும், பருப்பும் இருந்தது. அதைவைத்து நிலைமையை சமாளித்துக் கொண்டேன். 30 மணி நேரம் மழை நீர் வீட்டுக்குள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. என் கண் முன் நடந்த அனைத்தும் எனக்கு பீதியை ஏற்படுத்தியது" என்றார்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு பெரும்பாக்கம் காந்திநகர் சொசைட்டி குடியிருப்பில் மின்விநியோகம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தாலும், சோழிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் வரைச் செல்லும் 1.8 கி.மீ. சாலை குண்டும் குழியுமாக சேறும் சகதியுமாக இருக்கிறது என்கிறார் ராஜீவ்.

SCROLL FOR NEXT