தமிழகம்

ரூ.30-க்கு 3 வேளை உணவு; சைதை துரைசாமி வாக்குறுதி

கி.ஜெயப்பிரகாஷ்

இயற்கை ஆரோக்கிய மையம், ரூ.30-க்கு 3 வேளை சுவையான உணவு திட்டம் கொண்டு வரப்படும் என சைதாப்பேட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் அரசின் சாதனை எடுத்துரைத்து பிரச்சாரம் செய்வதோடு, சைதாப்பேட்டை தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் என கூறி வாக்கு சேகரிக்கிறார்.

சைதாப்பேட்டை கிழக்கு பகுதியில் இருக்கும் வெங்கடாபுரத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதிவாசிகளிடம் பேசிய அவர், ‘‘நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் சிறப்பாக வரவேற்று, ஆதரவு அளித்து வருகின்றனர். தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்காக சித்தா, யுனானி, யோகா உட்பட 5 மருத்துவ முறையை கொண்டுள்ள இயற்கை ஆரோக்கிய மையம், ரூ.30-க்கு 3 வேளை சுவையான உணவு திட்டம், மாணவர்கள், இளைஞர்கள் போட்டி தேர்வில் வென்று அரசு பணிக்கு செல்லும் வகையில் தரமான இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT