தமிழகம்

அலறும் ஒலிபெருக்கிகள்.. முதியோர், குழந்தைகள் தவிப்பு

என்.கணேஷ்ராஜ்

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் நகர்புறங்களில் ஓரளவு கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், கிராமங்களில் நிலைமை தலைகீழாக உள்ளது. வேட்பாளர்கள், விஐபி பேச்சாளர்களின் பிரச்சாரத்துக்காக கிராமங்களில் பல மணி நேரத்துக்கு முன்பாகவே ஒலிபெருக்கிகள் அலற விடப்படுவதால் முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.

தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் 74 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது முதற்கட்டப் பிரச்சாரத்தைக் கட்சியினர் விறுவிறுப்பாக மேற்கொண்டுள்ளனர். இதற்காக சமுதாயத் தலைவர்களை சந்திப்பது, சங்கங்கள், அமைப்புகளைச் சார்ந்தவர்களிடம் ஆதரவு கோருவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றனர். மாலையில் கிராமப்பகுதி வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இதற்காக தினமும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒருங்கிணைத்து பிரச்சாரத் திட்டம் வகுக்கப்படுகிறது. வேட்பாளர்கள் அல்லது விஐபி பேச்சாளர்கள் அப்பகுதிக்கு வரும் போது கூட்டம் திரட்டுதல், ஆரத்தி உள்ளிட்ட ஏற்பாடுகள் அமளி துமளிப்படுகின்றன.

மேலும் பிரம்மாண்ட ஸ்பீக்கர்களைக் கட்டி கட்சிகளின் கொள்கை விளக்கப் பாடல்கள், பழைய சினிமா பாடல்கள், தலைவர்களின் பேச்சுகளை மீண்டும் மீண்டும் அதிக சத்தத்துடன் ஒலிபரப்புகின்றனர். காலை 10 மணிக்கு வேட்பாளர் வருகிறார் என்றால், அதிகாலையிலேயே ஸ்பீக்கர்களை அலற விடுகின்றனர். மேலும் கொளுத்தும் வெயிலால் கட்சியினரும் சரியான நேரத்துக்கு வருவதில்லை.

மக்களை சமாதானப்படுத்த வேட்பாளர்களின் வருகை குறித்து அவ்வப்போது அறிவிப்பு செய்கின்றனர். இதனால் கிராமத்தின் அமைதியான சூழல் குலைகிறது.

சில நேரம் ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் ஒரே கிராமத்தில் பிரச்சாரத்துக்கு வருகின்றன. அப்போது காலை முதல் இரவு வரை ஒலி பெருக்கிகளை கிராமம் முழுவதும் கட்டி அலற விடுவதால் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

தேர்தல் பார்வையாளர்கள் கிராமங்களில் ஒலிபெருக்கிகளை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT