தமிழகம்

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால்வாக்கு படிவங்கள் விநியோகம் தொடங்கியது

கி.கணேஷ்

தமிழகம் முழுவதும் தபால் வாக்கு வசதி கோரி விண்ணப்பித்த 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு படிவங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழல் என்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு பிஹார் மாநில தேர்தல் கரோனாபாதிப்பு அதிகரித்திருந்த சூழலில் நடத்தப்பட்டதால், அதை முன்னுதாரணமாக கொண்டு தற்போது தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது.

குறிப்பாக, பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருப்ப அடிப்படையில் தபால் வாக்கு வசதி வழங்கும் நடைமுறையும் இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த மார்ச் 16-ம் தேதி வரை அந்தந்த தொகுதிகளில் வாக்காளர் பதிவு அலுவலர்கள், சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து 12 டி என்ற விருப்ப படிவத்தை பெற்றனர். அந்த வகையில், 80 வயதுக்கு மேற்பட்ட 12.87 லட்சம் வாக்காளர்களில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 567 பேரும், 4.81 லட்சம் மாற்றுத்திறனாளிகளில் 45 ஆயிரத்து 397 பேரும் தபால் வாக்கு கோரி விருப்பம் தெரிவித்தனர்.

இதையடுத்து, தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ளதால், தபால் வாக்கு விண்ணப்பங்களை வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து பெறும் பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தபால் வாக்கு பதிவு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT