தமிழகம்

இடிந்தகரையில் சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு: மீனவர்களிடையே மீண்டும் மோதலால் பதற்றம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் இரு தரப்பு மீனவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது 30-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒரு பெண் காயம் அடைந்தார். பதற்றத்தை தணிக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியே வந்த பின்னரும் இடிந்தகரையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடரும் மோதல்

அணு உலைக்கு ஆதரவாக ஸ்டாலின் என்பவர் தலைமையில் மற்றொரு தரப்பினர் செயல்பட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக அணுஉலை எதிர்ப்பு மற்றும் ஆதரவு தரப்பினர் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. மோதலின்போது, நாட்டு வெடிகுண்டுகள் வீசப்படுவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இடிந்தகரை கரையில் நங்கூரமிட்டு நிறுத்தியிருந்த கூடங்குளத்தைச் சேர்ந்த மீனவர் ஜான் சேவியர் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகின் கயிற்றை ஞாயிற்றுக்கிழமை மாலை மர்ம நபர்கள் அறுத்து விட்டு தப்பி ஓடினர். இதில், படகு பாறைகளில் முட்டி மோதி சேதமடைந்தது.

இரு தரப்பு புகார்

இதுகுறித்து ஜான் சேவியர் கூடங்குளம் போலீஸில் கொடுத்த புகாரில், ‘எனக்கு சொந்தமான பைபர் படகின் கயிற்றை, இடிந்தகரையைச் சேர்ந்த ஜோதி, மிக்கேல், சமாதானம், சாந்தகுரூஸ், வினோத் உள்ளிட்ட 10 பேர் அறுத்துவிட்டனர். இதில், எனது படகு சேதமடைந்தது. படகின் கயிற்றை அறுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஜோதி உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

ஜோதி தரப்பினர் கூடங்குளம் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், ஜான்சேவியர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களை உருட்டு கட்டையால் தாக்கவந்ததாக தெரிவித்தனர்.

வெடிகுண்டுகள் வீச்சு

திங்கள்கிழமை இடிந்தகரை சவேரியார் ஆலயம் முன், ஜான்சேவியர் மற்றும் ஜோதி ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இருதரப்பினரும் 30 க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில், இடிந்தகரையைச் சேர்ந்த வசந்தி (49) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த வள்ளியூர் டி.எஸ்.பி. பாலாஜி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் சிறப்பு பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, மோதல் நடந்த இடத்தில் சோதனை நடைபெற்றது. அப்போது, வெடிக்காமல் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப் பட்டன. அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT