தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 1,900 மினி கிளினிக்குகளில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளைப் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக சுகாதாரம், காவல், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 45 வயது முதல் 59 வயது வரையுள்ள இணை நோய் பாதிப்புள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. தடுப்பூசி மையங்களை அதிகரிப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை தமிழக சுகாதாரத் துறை செய்து வருகிறது.
இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, “முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்புள்ளவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 3,217 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 1,900 மினி கிளினிக்குகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்” என்றார்.