திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் 13 மடங்கு அதிகம் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் எடப்பாடி தொகுதி முதல்வர் பழனிசாமி, சங்ககிரி சுந்தரராஜன், ஓமலூர் மணி மற்றும் பாமக வேட்பாளர் மேட்டூர் சதாசிவம் ஆகியோரை ஆதரித்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
ஜெயலலிதா ஆட்சியின்போது, 12 லட்சம் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித்தரப்படும் திட்டம் தொடங்கப்பட்டு, 6.50 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டன. 2023-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும்.
கடந்த 2015-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது. இதன்மூலம் ரூ.2.42 லட்சம் கோடிக்கு முதலீடுகள் பெறப்பட்டன. அதில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, 72 திட்டங்கள் முழுமை யாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 73.71 சதவீதம் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில், 602 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 82.4 சதவீதம் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ரூ.45 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடு கொண்டு வரப்பட்டது. அதிமுக-வின் 10 ஆண்டு கால ஆட்சியில் 6.87 லட்சம் கோடி முதலீடு கொண்டு வரப்பட்டு, 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 602 புரிந்துணர்வு ஒப்பந்தகள் செய்யப்பட்டு, அதில் 82.4 சதவீதம் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. 26,309 புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் 13 மடங்கு அதிகம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் புள்ளி விவரம் தெரியாமல் பேசுகிறார். திமுக எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டது கிடையாது. ஜெயலலிதாவின் வழியில் தடம் பிறழாமல் நல்லாட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி. கூடுதலாக பல திட்டங்களை செய்து வருகிறார்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் மதக்கலவரங்கள், சாதிக் கலவரங்கள் ஏதுமின்றி அமைதிப் பூங்காவாக இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பாக இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
சேலத்தில் பிரச்சாரம்
தொடர்ந்து சேலம் தாதகாப்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் சேலம் தெற்கு பாலசுப்பிரமணியன், சேலம் வடக்கு வெங்கடாஜலம், கெங்கவல்லி நல்லதம்பி, ஆத்தூர் ஜெயசங்கரன், ஓமலூர் மணி, வீரபாண்டி ராஜமுத்து, ஏற்காடு சித்ரா, சங்ககிரி சுந்தரராஜன் மற்றும் பாமக வேட்பாளர்கள் சேலம் அருள், மேட்டூர் சதாசிவம் ஆகியோரை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களையும், விவசாயிகள் நலன் காக்கும் திட்டங்களையும் வகுத்து அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்தி, தமிழகம் தலைசிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது பொய் பிரச்சாரத்தை மக்கள் ஏற்க தயாராக இல்லை. திமுக-வின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு. அதிமுக தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு. இதன் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தருமபுரியில் பிரச்சாரம்
தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களான கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஜி.கே.மணி (பென்னாகரம்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி), கோவிந்தசாமி(பாப்பிரெட்டிப்பட்டி), சம்பத்குமார்(அரூர்) ஆகியோருக்கு ஆதரவு கேட்டு நேற்று இரவு தருமபுரி 4 சாலை சந்திப்புப் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாகனத்தில் இருந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டார்.