சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தபால் வாக்குச் சீட்டு விநியோகிக்கும் பணி இன்று தொடங்குகிறது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி இந்த தேர்தலில் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 300 பேர் வாக்களிக்க உள்ளனர். அவர்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கும் பணி 25-ம் தேதி (இன்று) தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கும் பணியில் 3 ஆயிரத்து 820 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் 70 வாக்குப்பதிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அதில் மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் பங்கேற்று பேசியதாவது:
தபால் வாக்கு செலுத்த உள்ள வாக்காளரின் முகவரிக்கு, அதிகாரிகள் குழு வரும் தேதி, நேரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். கைபேசி இல்லாத வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்களால் பூர்த்தி செய்து வழங்கப்பட்ட படிவம் 12டி-யில் உள்ள விவரங்களின்படி வாக்காளரின் அடையாள விவரங்களை உறுதி செய்தபின் தபால் வாக்குச்சீட்டை வழங்குவார்கள்.
வாக்குச்சீட்டை வழங்கும்போது வாக்காளரின் பெயர், அடையாள ஆவணங்களின் விவரம் ஆகியவற்றை பதிவேட்டில் பதிவு செய்து வாக்காளரின் கையொப்பம் அல்லது கட்டைவிரல் குறியினைப் பெறவேண்டும்.
வாக்காளர் தன்னுடைய தபால் வாக்கை பதிவு செய்த பின்னர் அதை முறையாக மூடி அலுவலர்களால் கொண்டு வரப்பட்ட சீல் வைக்கப்பட்ட பெட்டகத்தில் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் பெட்டியில் பெறப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகளின் விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்து, அதை அந்நாளின் முடிவில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதற்கென தனியாக உள்ள சீல் வைக்கப்பட்ட பெட்டியில் உரிய பதிவேட்டில் தேதி குறிப்பிட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும். தினமும் பெறப்படும் தபால் வாக்குகள் விவரம் இணையம் வழியாக தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் அளிக்க நியமிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு குழுவுக்குத் தேவையான வாக்குப்பதிவு பொருட்களை மாவட்ட தேர்தல் கோ.பிரகாஷ் வழங்கினார். இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.