சென்னையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மீண்டும் களப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோ.பிரகாஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் கரோனா தொற்று அதிகரித்தபோது, அதைத் தடுக்க 12 ஆயிரம் களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 150 வீடுகள் ஒதுக்கப்பட்டு, அங்குள்ள மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட கரோனா தொற்று அறிகுறி உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த நடைமுறையை மார்ச் 30-ம் தேதி முதல் சென்னையில் மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
100 மருத்துவர்கள்
தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி, அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தர 4 ஆயிரம் களப் பணியாளர்கள் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனர். அந்த நடைமுறையும் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. காய்ச்சல் முகாம்களும் மீண்டும் தொடங்கப்பட உள்ளன. மேலும் 100 மருத்துவர்கள், 100 ஆய்வக நுட்புனர்களும் நியமிக்கப்பட உள்ளனர். அன்றாட பரிசோதனையும் 15 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது.
இந்த முறை தொற்று அதிகரித்தாலும், பெரிய வரப்பிரசாதமாக கரோனா தடுப்பூசி கையில் இருக்கிறது. சென்னையில் இதுவரை 5 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினமும் 35 ஆயிரம் பேருக்கு போடப்பட்டு வருகிறது. இதை மேலும் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்வது அதிகரிக்கும்போதுதான் தொற்று பரவல் வேகம் குறைந்து, தொற்றால் ஏற்படும் உயிரிழப்பும் குறையும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரை தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.