திட்டக்குடியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின். 
தமிழகம்

அதிமுகவில் வெற்றியடையும் ஒவ்வொருவரும் பாஜகவின் பிரதிநிதியாகவே செயல்படுவார்கள்: திட்டக்குடி பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. அதே நேரத்தில் அதிமுகவும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்று விடக் கூடாது என்பதில் தமிழக மக்கள் கவனமாக செயல்படவேண்டும் என திட்டக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுகதலைவர் ஸ்டாலின் பேசினார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி (தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.வெ.கணேசன், நெய்வேலி திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரன், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோருக்கு நேற்று மாலை திட்டக்குடி பகுதியில் வாக்கு சேகரித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது:

மதச்சார்பற்ற கூட்டணி வேட் பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூல தமிழகத்தின் சுய மரியாதையும், தன்மானமும் காக்கப்படும். வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.6 லட்சம் கோடிக்கு தொழில் தொடங்கப்பட்டிருக்கிறது எனக்கூறும் இந்த அரசு, அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகள் என்ன, எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது என இதுவரை வெள்ளையறிக்கை வெளியிடவில்லை.

டெல்லியில் தொடர்ந்து போராடும் விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் அவர்களை தரகர்கள் என்கிறனர்.

மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை விண்ணை முட்டுகிறது. விலைவாசி விஷம் போல் உயர்ந்து நிற்கிறது. இவற்றுக்கு காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது அனைவரும் அறிந்தது. இந்த விலையை உயர்த்துவதில் மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு வரி வசூலில் இறங்கியுள்ளனர். இதற்காகத் தான் இந்த ஆட்சி தொடரக் கூடாது என்கிறோம்.

பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது என அனைவரும் அறிந்ததே. ஆனால் அதிமுகவும் வெற்றிபெறக் கூடாது. ஏனென் றால் அதிமுக மூலம் தேர்வு செய்யப்படுவோரும் பாஜகவின் பிரதிநிதியாகவே செயல்படுவர். ஏற்கெனவே மக்களவைத் தேர்தலில் அதிமுக மூலம் தேர்வு செய்யப்பட்ட ஓபிஎஸ் மகன் பாஜகவின் குரலாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே இதில் கவனம் தேவை என்றார்.

தொடர்ந்து விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் நேற்றிரவு திமுக வேட்பாளர்கள் திருக்கோவிலூர் - பொன்முடி, விழுப்புரம் - லட்சுமணன், விக்கிரவாண்டி - புகழேந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வானூர் வேட்பாளர் வன்னி அரசு ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT