கார்த்திக் 
தமிழகம்

பிரச்சாரத்துக்கு செல்வதற்கு முன்பே என்னை மிரட்டுகிறார்கள்: மதுரையில் நடிகர் கார்த்திக் பேட்டி

செய்திப்பிரிவு

தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்வதற்கு முன்பே என்னை மிரட்டுகிறார்கள் என மனித உரிமைக் காக்கும் கட்சி தலைவரான நடிகர் கார்த்திக் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அனைத்து சமூகத்திலும் இட ஒதுக்கீடு கட்டாயம் வேண்டும். சாதி அடிப்படை இன்றி பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கினால் நல்லது. நான் சார்ந்த சமூக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள் எனக் கூறி பிரச்சாரத்துக்கு வந்துள்ளேன்.

நடிகர்கள் சாதி, மதம் இனம் என பாகுபாடு இன்றி பொதுவானவர்கள். நானும் அரசியலுக்கு வருவதற்கு முன் அப்படித்தான். நான் சார்ந்த மனித உரிமை கட்சி முக்குலத்தோருக்கானது. இங்கு சாதிக்காக இல்லாவிட்டாலும் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறேன்.

டிஎன்டி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முதல்வருடன் கூறினேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட கருத்து, சாதிரீதியாக இல்லாமல் அனைத்து சமூகத்திலும் பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு வழங்கினால் நன்றாக இருக்கும்.

நான் வசதியாக உள்ளேன். எனக்கு எந்தவிதத் தேவையும் இல்லை. ஆனால், நலிவடைந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். முதல்வர் பழனிசாமி தேர்தலில் போட்டியிட எனக்கு சீட் தருகிறேன் எனக் கூறினார். ஆனால், நான் பிரச்சாரத்துக்கு மட்டும் வருகிறேன் என்று கூறி தற்போது வந்துள்ளேன்.

கோவில்பட்டியில் பிரச்சாரம் செய்ய உள்ளேன். என்னுடன் இருந்த ஏராளமான பேர் மாற்றுக் கட்சிக்குச் சென்று விட்டனர். ஆனால் சரணாலயம் அமைப்பில் என்னுடன் கூட இருக்கும் உண்மைத் தொண்டர்கள் அப்படியே இன்றும் இருக்கிறார்கள்.

பிரச்சாரத்துக்குச் செல்வதற்கு முன் என்னை மிரட்டப் பார்க்கிறார்கள். கம்பு சுத்தி ரொம்ப நாளாயிற்று. சுற்றிப் பார்க்க (சிலம்பம்) வேண்டும் என்று கூறியுள்ளேன், என்றார்.

SCROLL FOR NEXT