முதியோர் உதவித் தொகை கொடுக்க முடியாதவர்கள் உங்களுக்கு எப்படி ரூ.1,500 தருவார் கள் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பினார்.
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே அமமுக வேட்பாளர் ஏ.ஜி.பஞ்சாட்சரம், செங்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் அன்பு ஆகியோருக்கு ஆதரவாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘இந்தத் தேர்தலில் தி.மலை மக்கள் நன்றாக யோசித்து வாக் களிக்க வேண்டும். எம்ஜிஆரால் தீயசக்தி என அடையாளம் காட்டப்பட்ட திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்று கடந்த காலத்தை யோசித்துப் பாருங்கள். எப்படியாவது ஆட்சிக்கு வந்து மக்கள் வரிப்பணத்தை சுரண்ட கொக்கரித்து நிற்கிறார்கள்.
அரசு கஜானாவில் ரூ.6 லட்சம் கோடி கடனில் முதல்வர் பழனிசாமி தள்ளிவிட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி தமிழின துரோக கூட்டணியை அமைத்துள்ளார்.
இந்த ஊருக்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம். பழனிசாமி இந்த தொகுதியை நைசாக பாஜகவிடம் தள்ளி விட்டுள்ளார்.
தமிழக மக்களின் நலன் பாதிக்கும் ஆட்சி நடத்துவதால் அதிமுக கூட்டணியை மக்கள் புறந்தள்ளுகிறார்கள். முதியோர் உதவித்தொகை கொடுக்க முடி யாதவர்கள் உங்களுக்கு எப்படி 1500 ரூபாய் தருவார்கள்.
திருவண்ணாமலை தொகுதிக்கு விரிவுபடுத்தப்பட்ட பேருந்து நிலையம், டான்காப் எண்ணெய் வித்து தொழிற்சாலை திறக்கவும், ஒருங்கிணைந்த காய்கறி இறைச்சி மார்க்கெட் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.