தேர்தல் பிரச்சார நேரங்களில் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் கண்டிப்பாகக் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அர்ஜுன் சர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 24) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் வாக்குப் பதிவுக்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 9 முக்கியமான எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1950 என்ற எண்ணிலும், சி- விஜில் செயலி மூலமும் வரக்கூடிய புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விதிமீறல்கள் தொடர்பாகப் பொதுமக்கள் தேர்தல் துறையின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டும். மார்ச் 25 முதல் 27-ம் தேதி வரை தபால் வாக்குகளைச் சேகரிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டுள்ளன.
வாக்களர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள், மது உள்ளிட்டவை வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர், பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்குச் சாவடிகளில் ஏப்.6-ம் தேதி வாக்குப் பதிவின்போது கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், முகக்கவசம், கையுறை வழங்கி, உடல் வெப்பநிலையைப் பரிசோதித்து, தனிமனித இடைவெளியுடன் வாக்குச் சாவடிக்குள் வாக்காளர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.
காரைக்கால் மாவட்டத்தில் 30 பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்தியப் பாதுகாப்புப் படையினர் ஒரு கம்பெனி காரைக்காலுக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 5 கம்பெனி பாதுகாப்புப் படையினர் சில நாட்களில் வரவுள்ளனர்.
பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் நடைமுறைகளின்போது வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் உரிய கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மேலும் சுதந்திரமான, அமைதியான, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற மாவட்டத் தேர்தல் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.”
இவ்வாறு ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்தார்.