செல்லாத ரூ.1000 நோட்டைப் போல் மோடியையும், எடப்பாடி பழனிசாமியையும் செல்லா காசாக்க வேண்டும் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் திமுக வேட்பாளர் ஏஎல்எஸ் லட்சுமணனை ஆதரித்து தச்சநல்லூரிலும், பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் மு. அப்துல் வகாபை ஆதரித்து பாளையங்கோட்டை மார்க்கெட் திடலிலும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலில் மதசார்பற்ற கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தீர்கள். அதனால் தமிழக மக்கள் மீது பிரதமர் மோடிக்கு கடும் கோபம் உள்ளது. மக்களவைத் தேர்தலில் மோடி அலை இந்தியா முழுவதும் இருந்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அது நடக்கவில்லை.
3 ஆண்டுகளுக்குமுன் நள்ளிரவில் திடீரென 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மோடி அறிவித்தார். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலில் ஏடிஎம் வாசல் முன்பு காத்துகிடந்தார்கள். செல்லாத 1000 ரூபாய் நோட்டை போன்று மோடியையும் எடப்பாடி பழனிச்சாமியையும் செல்லா காசாக்க வேண்டும்.
புதிய இந்தியா பிறக்கப் போவதாக மோடி தெரிவித்தார் நானும் மூன்று ஆண்டுகளாக போகும் இடங்களில் எல்லாம் தேடி பார்க்கிறேன். புதிய இந்தியாவை காணவில்லை.
ஜிஎஸ்டி வரியாக இதுவரை ரூ. 15,000 கோடியை மத்திய அரசுக்கு கொடுத்துள்ளோம். அதை திருப்பி கேட்டால், நிதி நெருக்கடி இருப்பதால் தர முடியாது என்கிறார்கள். ஆனால் அவர் மட்டும் செல்வதற்காக ரூ 8,000 கோடியில் புது சொகுசு விமானம் வாங்கியுள்ளனர். ரூ. 10 ஆயிரம் கோடியில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுகிறார்கள். இது யார் பணம்? உங்களின் பணம்.
காலைப் பிடித்து பதவி வாங்கிய முதல்வர் பழனிசாமி, சசிகலாவின் காலையும் வாரி விட்டுவிட்டார். எதாவது ஒரு பிரச்னைக்கு மோடியை எதிர்த்து அவர் குரல் கொடுக்கிறாரா? மோடி நில் என்றால் நிற்பார், முட்டி போடு என்றால் முட்டி போடுவார். அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கும் பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு என்பதை மக்கள் மறக்கக் கூடாது.
தமிழக மக்களின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசிடம் அதிமுக அரசு அடகு வைத்துவிட்டது. நமது கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்வரை மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு வரவில்லை. அவர்களுக்குப்பின் நீட் தேர்வை கொண்டுவந்ததால் தமிழகத்தில் மட்டும் 14 மாணவ, மாணவியர் இதுவரை இறந்துள்ளனர்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவதாக சொன்னார்கள். ஆனால் எந்த பணிகளும் நடைபெறவில்லை. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் போராடின. ஆனால் சிஏஏ சட்டத்தை ஆதரித்து ஓபிஸ் மகன், ஜி.கே. வாசன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மக்களவையில் வாக்களித்தனர். இதை மக்கள் மறந்துவிட கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தச்சநல்லூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சிலர், ரேஷன் பொருட்கள் முறையாக கொடுப்பதில்லை என்று முறையிட்டனர். அதற்கு பதில் அளித்த உதயநிதி, இன்னும் 2 மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றார். மற்றொரு பெண் ஒருவர், மதுக் கடைகளை மூட வேண்டும் என்றார். அதற்கு, கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருந்தால் இந்நேரம் மது கடைகளை அடைத்திருப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் பதில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அம்பாசமுத்திரத்தில் அத்தொகுதி திமுக வேட்பாளர் இரா. ஆவுடையப்பனையும், ராாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மு. அப்பாவுவை ஆதரித்து வள்ளியூரிலும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.