ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதால் கரோனா பரிசோதனை முடிவு வரும் வரை தேமுதிக பொருளாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்ய உள்ளதாக தேமுதிகவினர் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அமமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். கடந்த 18-ம் தேதி சகோதரர் சுதீஷுடன் வந்து அவர் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில் 19-ம் தேதி சுதீஷுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சுதீஷின் மனைவியும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சுதீஷுடன் இருந்த பிரேமலதா உள்ளிட்ட சிலருக்கும் கரோனா தொற்று இருக்கலாம் என சுகாதாரத்துறை அச்சம் தெரிவித்த நிலையில் பிரேமலதா தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார். விருத்தாசலம் நகரப் பகுதியில் பிரேமலதா இன்று பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது அங்கு வந்த விருத்தாசலம் சுகாதாரத்துறை ஆய்வாளர், கரோனா பரிசோதனை மேற்கொள்ள ஒத்துழைக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
ஆனால், தான் ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் அதனால் பரிசோதனை தேவையில்லை எனவும் பிரேமலதா தெரிவித்தார். இருப்பினும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தலுக்குப் பின் பரிசோதனை செய்துகொள்ள ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் தங்கியிருக்கும் தனியார் பள்ளி வளாகத்திற்குச் சென்ற சுகாதாரத்துறையினர் அவரிடம் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இருப்பினும் பரிசோதனை முடிவுகள் நாளை மறுதினம்தான் (வெள்ளிக்கிழமை) தெரிய வரும் என்பதால், அதுவரை பிரேமலதா பிரச்சாரத்தை மேற்கொள்வார் என அவரது கட்சியினர் தெரிவித்தனர்.