ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது தான் லட்சியம் என செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரே அரசு அதிமுக அரசு தான், என முதல்வர் பழனிசாமி பேசினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழநி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது உருப்படியாக எதையும் பேசாமல், கட்சித் தலைவர்களை விமர்சித்து வருகிறார். அதிமுக இயக்கம் தான் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய இயக்கம்.
என்னை ஒரு போலி விவசாயி என்கிறார். விவசாயத்தில் போலி விவசாயி எங்கும் உள்ளனரா. விவசாயிகளைக் கொச்சைப்படுத்திப்பேசும் தலைவர் இந்த நாட்டிற்கு தேவையா?
விவசாயிகளுக்கு துரோகம் செய்த கட்சி திமுக. கருணாநிதி முதல்வராக இருந்தபோது மின்கட்டணத்தைக் குறைக்ககோரி போராட்டம் நடத்திய விவசாயிகளை குருவி சுடுவது போல் சுட்டுவீழ்த்திய கட்சி திமுக. விவசாயிகளை நன்மை பயக்கும் இயக்கம் அதிமுக.
தேர்தல் பிரச்சாரத்தின்போது திட்டமிட்டே தரக்குறைவாகவும், தரந்தாழ்ந்தும், சிறுமைப்படுத்தியும் பேசுகிறார். தகுதியில்லாத தலைவராக ஸ்டாலின் உள்ளார். இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே டிஜிபியை மிரட்டுகிறார்.
மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இந்தியாவிலேயே அமைதிபூங்காவாக தமிழ்நாடு திகழ்கிறது.
பல ஆண்டுகளாக தமிழகத்தில் தூர்வாரப்படாத ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது, என்றார்.
அப்போது குறுக்கிட்ட தொண்டர் ஒருவர், அப்படியே தேசிய வங்கியில் பெறப்பட்ட கடன்களையும் ரத்துசெய்யுங்கள் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிச்சாமி, ‘தேசிய வங்கி நமக்கு கீழ் வராதப்பா, பொய்சொல்லக்கூடதல்லவா,’ என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, 100 நாள் வேலைத்திட்டம் வேலைநாள் உயர்த்தப்படும், கேபிள் டிவி இணைப்பு இலவசமாக வழங்கப்படும். ஆறு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.
இல்லத்தரசிகளின் சுமையை குறைக்க வாஷிங்மிஷின் வழங்கப்படும். வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட குஜிலியம்பாறையை தனித்தாலுகாவா அறிவித்தது அதிமுக அரசு. வேடசந்தூர் தொகுதியில் உணவுப்பூங்கா அமைக்கப்படும்.
முருங்கை பதப்படுத்தும்நிலையம் அமைக்கப்படும். தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இடம் கிடைத்தும் பணம் இன்றி படிக்கஇயலாத மாணவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்றது. ஏழைமக்களுக்கென ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது தான் லட்சியமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது அதிமுக அரசு, என்றார்.