தென்மண்டல ஐஜி முருகன், தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் மாற்றப்பட்ட நிலையில், அப்பதவி தகுதி உயர்த்தப்பட்டு ஏடிஜிபி ரேங்க் அதிகாரியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபிக்கு கீழ் தமிழகத்தில் 4 ஐஜிக்கள் வருகின்றனர். மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலம், வடக்கு மண்டலம் என 4 மண்டலங்கள் வருகின்றன. இதன் ஐஜிக்கள் மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பார்கள்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் வராத நிலையில், கடந்த வாரம் ஏடிஎஸ்பி அளவிலான அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இவர்களுடன் தென் மண்டல ஐஜி முருகனையும் மாற்ற உத்தரவிட்ட தேர்தல் ஆணையம், அவர்களுக்கு தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளை ஒதுக்கக்கூடாது என உத்தரவிட்டது.
இதையடுத்து தென் மண்டல ஐஜியாக இருந்த முருகன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். 2 நாட்கள் கழித்து நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டார். தென் மண்டல ஐஜி பொறுப்புக்கு அதிகாரிகள் நியமிக்கப்படாத நிலையில், இன்று ஏடிஜிபி ஆபாஷ்குமாரை நியமித்து உள்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பில், ''பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமார் மாற்றப்பட்டு தென்மண்டல ஏடிஜிபியாக நியமிக்கப்படுகிறார். ஐஜி அந்தஸ்தில் இருந்த இப்பதவி தற்போது ஏடிஜிபி அந்தஸ்துக்குத் தகுதி உயர்த்தப்பட்டது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.