'இந்த லேடியா- அந்த மோடியா?' என்று ஜெயலலிதா கேட்டதுபோல், 'இந்த தாடியா- அந்த தாடியா?' என்று கேட்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் முருகானந்தம் (திருவெறும்பூர்), வீரசக்தி (திருச்சி கிழக்கு), அபூபக்கர் சித்திக் (திருச்சி மேற்கு), பிரான்சிஸ் மேரி (ஸ்ரீரங்கம்), யுவராஜன் (துறையூர்), கோகுல் (முசிறி), சாம்சன் (மண்ணச்சநல்லூர்) ஆகியோரை ஆதரித்து திருச்சி கீழ ஆண்டார் வீதியில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியது:
''பசி எப்படி இருக்கும் என்றும், பசியைத் தீர்க்க முடிந்தால் அதிலிருந்து கிடைக்கும் ஆசியும், வாழ்த்தும் என்னவென்றும் எனக்குத் தெரியும். எனவேதான், எனக்கு ஏழ்மையின் மீது தீராத கோபம் உள்ளது. தேர்தல் நேரத்தில் காசு கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில், மக்களின் ஏழ்மையை அரசியல் கட்சிகள் வெகுகவனமாகப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. எனவே, கட்சிகள் கொடுக்கும் ரூ.5,000-க்கு ஆசைப்பட்டு இந்தத் தேர்தலில் தங்கள் 5 ஆண்டு கால வாழ்க்கையைக் குத்தகைக்கு விடாதீர்கள்.
நான் நேர்மையானவன். ஆனால், நேர்மை என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட முடியாத அளவுக்கு அவர்கள் ஊழலில் அமிழ்ந்திருக்கின்றனர். இப்போது எங்கள் வேட்பாளரின் நண்பரின் வீட்டில் ரெய்டு நடப்பதை வைத்து நாங்களும் அப்படித்தான் என்கின்றனர். எங்கள் மீது எவ்வளவு கறை பூசினாலும் அது படியாது. ஏனெனில், நாங்கள் தினமும் நேர்மையைப் பழகுபவர்கள்.
நான் ஹெலிகாப்டரில் செல்வதற்குப் பாஜக பணம் கொடுத்ததாகக் கூறுகின்றனர். ஜிஎஸ்டி வரி விதித்தது முதல் நான் மத்திய அரசை விமர்சித்து வருகிறேன். ஒரு எம்எல்ஏவாவது கிடைக்கும் என்று பாஜக வெகுவாக நம்பியிருந்த நிலையில், அதுவும் கிடைக்காமல் செய்யவே தேடிப் பிடித்து ஒரு தொகுதியில் போட்டியிடுகிறேன். இப்படியிருக்க எப்படி எனக்கு பாஜக பணம் தருவார்கள்?
என்னை பி டீம் என்று திமுகதான் பரப்பியது. நான் காந்திக்கு மட்டுமே பி டீம். ஆனால், திமுகதான் பாஜகவின் பி டீம் என்பது விரைவில் நிரூபணமாகும். எனவேதான், திமுக வெற்றி பெறக் கூடாது என்கிறேன். ஏனெனில், வெற்றி பெற்றால் இவர்களும் உடனடியாக மத்திய அரசிடம் போய் கையைக் கட்டிக்கொண்டு நிற்பார்கள். அப்படி நிற்காமல் மத்திய அரசை எதிர்க்க, தைரியமான ஆள் வேண்டும். 'இந்த லேடியா- அந்த மோடியா?' என்று ஜெயலலிதா கேட்டதுபோல், 'இந்த தாடியா- அந்த தாடியா?' என்று நான் கேட்கிறேன்.
முதல்வர் கே.பழனிசாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பரஸ்பரம் பல லட்சம் கோடி ரூபாயைத் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். ஆனால், ஒருவர்கூட அவ்வாறு நடக்கவில்லை என்று மறுக்கவில்லை. திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் மாறி மாறி ஊழல் செய்துள்ளன. எனவே, அவர்கள் பேச்சைக் கேட்காதீர்கள்.
இலவசங்களையும் உங்கள் பணத்தில்தான் தருகின்றனர். இலவசங்கள் ஏழ்மையைப் போக்காது என்பதால், அதைச் செய்ய அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காதீர்கள். தமிழ்நாடு திவாலாகிவிடுவதற்கு முன் மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.
மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்றுதான் தேர்தலில் களம் இறங்கியுள்ளேன். மக்களின் மீட்சிக்காகவும், நேர்மையின் மீட்சிக்காகவுமே ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுகிறோம். ஆட்சிக்கு வந்தால் நாற்காலியில் ஓய்வாக அமராமல், சுரண்டப்பட்ட கஜானாவை மறுபடியும் நிரப்பவும், மக்களின் தலையில் விழுந்துள்ள கடன் சுமையைத் தீர்க்கவும் உழைப்போம். திருடாமல் இருந்தாலே தமிழ்நாட்டை வளமாக வைக்கலாம். தமிழ்நாடு சீரமைக்கப்பட, தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்''.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.