சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ 2-வது முறையாககட்சியில் சீட் தராததால் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அதே தொகுதியில் அவரது மகனும் போட்டியிடுகிறார். மற்றொரு மகன் வேட்புமனுவை வாபஸ்பெற்ற நிலையில் தந்தையும், மகனும் தனித்தனியாக தீவிரமாக வாக்குசேகரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான சி.சந்திரசேகரன் தனக்கு 2-வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாக களம் இறங்கி ஆட்டோ சின்னத்தில் பிரதான கட்சிகளுக்கு இணையாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
சி.சந்திரசேகரனுக்கு யுவராஜ், ரஞ்சித் என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், யுவராஜ் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். ரஞ்சித், தந்தை சந்திரசேகரனைப் போல் சுயேச்சையாக களத்தில் உள்ளார். இவரும் தந்தைக்கு இணையாக சிலிண்டர் சின்னத்துக்கு வாக்கு கேட்டு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆச்சர்யத்தில் மக்கள்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு கட்சிகளில் இருப்பதும், தேர்தலில் போட்டியிடுவதும் சகஜம். ஆனால், சேந்தமங்கலம் தொகுதியில் தந்தை, மகன் இருவரும் ஒரே தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கி வலம் வருவது தொகுதி மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுயேச்சையாக களம் இறங்கிய எம்எல்ஏ சந்திரசேகரன், அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.