செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதியில் மநீம சார்பில் செந்தில் ஆறுமுகம் போட்டியிடுகிறார். இவர் நேற்று மதியம் 1 மணியளவில் பல்லாவரம் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி வழங்காததை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி தராமல் இழுத்தடிக்கிறார்கள். கேட்டால் காவல்துறை என்ஓசி அளிக்கவில்லை என்று சொல்கிறார்கள். அனுமதி கோரி மொபைல் செயலியில் விண்ணப்பிக்குமாறு கூறுகிறார்கள். செயலியில் விண்ணப்பிக்கும்போது இடம், நேரம் குறிப்பிடுவது என பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. பக்கத்து தொகுதியான தாம்பரத்தில் வாகன அனுமதி பெறுவதற்கு இதுபோன்று செயலி மூலமாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் போடவில்லை" என்றார்.
இதுகுறித்து தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஏ.லலிதாவை செல்போனில் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் விளக்கம் ஏதும் பெற முடியவில்லை.