தமிழகம்

ஓட்டல்கள், வணிக வளாகங்கள், பொது இடங்களில் கரோனா விதிகளை மீறினால் கூடுதல் கட்டுப்பாடு அமலாகும்: மருத்துவ நிபுணர்கள் உடனான ஆலோசனைக்கு பிறகு தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

உள்ளரங்குகள், வணிக வளாகம், ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், நோய் பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில், மருத்துவ வல்லுநர் குழுவுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உலக சுகாதார நிறுவன முதன்மை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், சென்னை தொற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரப்தீப் கவுர் உள்ளிட்ட நிபுணர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து தலைமைச் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக இதுவரைரூ.91.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டள்ளது. நோய் பாதிப்பு அதிகம்உள்ள மாவட்டங்களில் தேவையான படுக்கைகள், பாதுகாப்பு கவசங்கள், முகக் கவசங்கள், ஆக்ஸிஜன் கருவிகள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறைசெயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை 23லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து, மருத்துவ வல்லுநர்கள் கூறும்போது, ‘‘முகக் கவசம்அணிவது போன்ற நடைமுறைகளை பின்பற்றுவது பொதுமக்கள்மத்தியில் முற்றிலும் குறைந்துவிட்டது. கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க இதுவே மிக முக்கிய காரணம். அவர்களிடம் கரோனா தொற்று ஏற்படும்போது, அவர்கள் வசிக்கும் இடத்திலோ, பணி செய்யும் இடத்திலோ இதனால் கூட்டுத் தொற்று உருவாக வழிவகை செய்கிறது. தவிர, இந்த நுண்கிருமி அவ்வப்போது உருமாற்றம் பெறுவதால் கூடுதல் மரபியல் ரீதியான ஆய்வு மேற்கொள்வது அவசியம். பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இன்னும் வேகமாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.

இதையடுத்து எடுக்கப்பட்டுள்ள முடிவுகள்:

மருத்துவம், நர்சிங், விவசாயம், கால்நடை, சட்டம் மற்றும்இதர படிப்புகளைப் பொருத்தவரை, தேர்வுகள் நடந்துகொண்டு இருந்தால் அந்தந்த பல்கலைக்கழகங்களின் முடிவுக்கு ஏற்ப மார்ச் 31-க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

உள்ளரங்குகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் 50 சதவீத இடங்கள் அல்லது 600 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும். இதை மீறினால் நிகழ்ச்சி நடத்துபவர்கள், உள்ளரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்துக்கு வருவோர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். அனுமதிக்கப்பட்ட வயதுக்கு ஏற்ப தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வணிக வளாகம், உணவுக்கூடம், திரையரங்குகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமீறல் காணப்பட்டால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT