சென்னையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர் தடுப்பூசி போடும் மையங்களை எளிதில் அணுக வசதியாக, அமைவிடத்துக்கு செல்லும் கூகுள் வரைபட வழிகாட்டியுடன் கூடிய முகவரியை இணையதளத்தில் மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் கரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதற்காக சிறப்பு முகாம்களையும் அமைத்து வருகிறது. தூய்மைப் பணியாளர்கள், போலீஸார், தேர்தல் பணியில் ஈடுபடுவோர் மட்டுமல்லாது, தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர் களின் எண்ணிக்கையை அதிக ரிப்பதன் மூலம் தொற்று பரவலைகட்டுப்படுத்த முடியும் என மாநகராட்சி நிர்வாகம் கருதுகிறது. அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர், அந்த மையங்களை எளிதில் அணுகும் வகையில், மையங்களின் கூகுள்வரைபட வழிகாட்டியுடன் கூடியமுகவரி விவரங்கள் மாநகராட்சிஇணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ளன.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
23-ம் தேதி நிலவரப்படி, சென்னை மாவட்டத்தில் கரோனாதடுப்பூசி போட்டுக்கொண்டவர் களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் அளவுக்கு வசதிகள் உள்ளன. அதனால் தினமும் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நேரு உள் விளையாட்டரங்கம், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையம் உள்ளிட்ட இடங்களில் மாபெரும் தடுப்பூசி போடும் முகாம்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்போர் நலச்சங்க உதவியுடன், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தடுப்பூசி போடும் முகாம்களை நடத்தி வருகிறோம்.
140 ஆரம்ப சுகாதார நிலையங்கள்
சென்னையில் மாநகராட்சியின் 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 சமுதாய நல மையங்கள், தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனை, 19 இடங்களில் உள்ள மத்திய, மாநில அரசு மருத்துவமனைகள், 175 தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர், தடுப்பூசி மையங்களை எளிதில் அணுக ஏதுவாக அந்த மையங் களின் அமைவிடம் குறித்த கூகுள் வரைபட வழிகாட்டியுடன் கூடிய முகவரிகள் மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/covid-vaccine/ என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
அதை பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 40 லட்சத்தை நெருங்கும்போது, தொற்றுப் பரவல் குறைந்து, தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளும் தவிர்க் கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.